/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஆரம்ப சுகாதார நிலையமாக தரம் உயர்த்த எதிர்பார்ப்பு
/
ஆரம்ப சுகாதார நிலையமாக தரம் உயர்த்த எதிர்பார்ப்பு
ADDED : ஏப் 06, 2025 11:33 PM

ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தின் மேற்கு எல்லையாக அமைந்துள்ளது, விடியங்காடு கிராமம். இந்த கிராமத்தை அடுத்து ஆந்திர மாநிலம், சித்துார் மாவட்ட வனப்பகுதி உள்ளது. இக்கிராமத்தில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
ஒன்றியத்தின் எல்லையில் அமைந்துள்ள விடியங்காடு கிராமத்தினர், மருத்துவம் மற்றும் பேருந்து வசதியில் பின்தங்கியுள்ளனர். விடியங்காடு, வெங்கடாபுரம், தாமரைகுளம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்தவர்கள், விடியங்காடில் செயல்பட்டு வரும் துணை சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெறுகின்றனர்.
இந்த துணை சுகாதார நிலையம், காலை 9:00 - மாலை 4:00 மணி வரையிலும், வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை தவிர ஆறு நாட்களும் செயல்படுகிறது. குறிப்பாக, பெண்கள், கர்ப்பிணியர் துணை சுகாதார நிலையத்தில் மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
அவசர சிகிச்சை மற்றும் விபத்து சிகிச்சைகளுக்காக, வேலுார் மாவட்டம், பொன்னை அரசு மருத்துவமனை அல்லது ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் மருத்துவமனைகளுக்கு செல்கின்றனர்.
எனவே, விடியங்காடு கிராமத்திற்கு போதிய பேருந்து வசதி இல்லாததால், துணை சுகாதார மையத்தை, ஆரம்ப சுகாதார நிலையமாக தரம் உயர்த்த வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

