/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
'டிட்வா' புயலால் 15 நாட்களாக தொழில் பாதிப்பு மீனவர்கள் தவிப்பு: பழவேற்காடு கரையில் ஓய்வெடுக்கும் படகுகள்
/
'டிட்வா' புயலால் 15 நாட்களாக தொழில் பாதிப்பு மீனவர்கள் தவிப்பு: பழவேற்காடு கரையில் ஓய்வெடுக்கும் படகுகள்
'டிட்வா' புயலால் 15 நாட்களாக தொழில் பாதிப்பு மீனவர்கள் தவிப்பு: பழவேற்காடு கரையில் ஓய்வெடுக்கும் படகுகள்
'டிட்வா' புயலால் 15 நாட்களாக தொழில் பாதிப்பு மீனவர்கள் தவிப்பு: பழவேற்காடு கரையில் ஓய்வெடுக்கும் படகுகள்
ADDED : டிச 08, 2025 06:26 AM

பழவேற்காடு: 'டிட்வா' புயல் மற்றும் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக கடந்த 15 நாட்களாக பழவேற்காடு கடலோர கிராமங்களில், மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால், 13,000 பேர் வீடுகளில் முடங்கினர். கடற்கரையில் ஓய்வெடுக்கும் படகுகளால் அவர்கள் வருவாய் இல்லாமல் தவித்து வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு மீனவப்பகுதியானது வங்காள விரிகுடா கடற்கைரையை ஒட்டி, 18.9 கி.மீ., அமைந்து உள்ளது. இங்கு 56 மீனவ கிராமங்களில் உள்ள, 13,700 மீனவர்களின் பிரதான தொழில் மீன் பிடிப்பதாகும். இதற்காக, 4,200 மீன்பிடி படகுகள் பயன் படுத்தப்படுகின்றன.
கடலில் மீன்பிடிப்பது, அவற்றை மொத்த வியாபாரிகளிடம் விற்பனை செய்து அதன் மூலம் கிடைக்கும் வருவாயை கொண்டு வாழ்வா தாரத்தை காப்பது என இருக்கின்றனர்.
மாற்று தொழில் ஏதும் இல்லாத நிலையில் வருவாய் இல்லாத நாட்களில் கடன் வாங்கி குடும்ப செலவினங்களை பார்க்கின்றனர்.
இந்நிலையில், கடந்த, 23ம் வங்ககடலில் 'டிட்வா' புயல் உருவாகியதை தொடர்ந்து, மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என, மீன்வளத்துறை அறிவுறுத்தியது.
புயல் எச்சரிக்கையை தொடர்ந்து, மீனவர்கள் கடலில் மீன்பிடி தொழிலுக்கு செல்லாமல், தங்களது படகு மற்றும் வலைகளை பாது காக்கும் பணிகளை மேற் கொண்டனர்.
கடந்த, 29ல் புயல் கரையை கடக்கும் என, எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வங்க கடலில் நான்கு நாட்கள் நிலைகொண்டது.
இதனால் கனமழை பொழிவு இருந்தது. மழை விட்டு இரண்டு நாட்கள் ஆன நிலையில், தற்போதும் வங்க கடல் சீற்றமாகவே இருக்கிறது. இதனால் நேற்று வரை மீனவர்கள் தொழிலுக்கு செல்லாமல் வீடுகளில் முடங்கி கிடக்கின்றனர்.
மீன்பிடி படகுகள், வலைகள் பணியின்றி ஓய்வெடுத்து வருகின்றன. மீனவர்கள் தொழிலுக்கு செல்லாத நிலையில் மீன் இறங்கு தளம், ஏலக்கூடம் வெறிச்சோடி கிடக்கின்றன.
கடந்த 15நாட்களாக மீன்பிடி தொழில் பாதித்து உள்ளதால், மீனவர்கள் வருவாய் இன்றி தவித்து வருகின்றனர்.
தினமும் கடற்கரை மற்றும் ஏரியின் கரையோரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படகுகள் மற்றும் வலைகளை கண்காணித்து வருகின்றனர்.
வருவாய் இல்லாத நிலையில், வீட்டில் உள்ள நகைகளை அடகு வைத்தும், வெளிநபர்களிடம் கடன் வாங்கியும் அன்றாட குடும்ப செலவினங்களை பார்த்து வருகின்றனர்.
இது குறித்து மீனவர்கள் கூறியதாவது:
மழைவிட்டும் கடலில் சீற்றம் குறையவில்லை. மீன்வளத்துறையும் மீன்பிடி தொழிலுக்கு செல்வது தொடர்பாக அறிவிப்பு ஏதும் தரவில்லை. இதனால் தொழிலுக்கு செல்லாமல் இருக்கிறோம்.
மழைக்காலங்களில் இரண்டு மாதங்கள் தொழிலுக்கு செல்ல முடிவதில்லை. அதுபோன்று இரண்டு மாதங்கள் மீன்பிடி தடைகாலம் இருக்கிறது.
ராக்கெட் ஏவுதல், புத்தாண்டு, காணும்பொங்கல், ஊர்கட்டுப்பாடு என இரண்டு மாதங்கள் தொழில் இருக்காது. இவ்வாறு ஆண்டிற்கு, ஆறு மாதங்கள் தொழில் செய்ய முடியாத நிலையே உள்ளது.
மாற்று தொழில் தெரியாத எங்களுக்கு மீன்பிடி தொழில் தான் வாழ்வாதாரம். தொழில் இல்லாத ஆறுமாதங்கள் கடனில் ஓடுது வாழ்க்கை. தொழிலுக்கு செல்லும் ஆறுமாதங்கள் வாங்கிய கடனை அடைப்பதற்கே சரியாக இருக்கிறது.
மீனவர்கள் வாழ்வாதாரம் கருதி, நிவாரண உதவிகளை அதிகப்படுத்தவும், தொழில் இல்லாத காலங்களில் வருவாய்க்கு மீன்பிடி தொழில் சார்ந்த, மாற்று தொழில் ஏற்படுத்தவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

