ADDED : நவ 16, 2026 05:36 PM
திருவாலங்காடு: சின்னம்மாபேட்டையில், வீட்டின் அருகே கட்டப்பட்டிருந்த ஐந்து ஆடுகளை, மர்ம நபர்கள் இன்று (நவ.,16) திருடி சென்றனர்.
திருவாலங்காடு காவல் எல்லைக்குட்பட்டது சின்னம்மாபேட்டை கிராமம். இங்கு, ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் வசிப்பவர் ஆறுமுகம், 50. இவர், 20 ஆடுகளை வைத்து பராமரித்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று (நவ.,15) இரவு, வழக்கம்போல ஆடுகளை வீட்டின் அருகே உள்ள பட்டியில் அடைத்து விட்டு தூங்க சென்றார்.
காலை எழுந்து பார்த்தபோது, அதில் ஐந்து ஆடுகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து, திருவாலங்காடு காவல் நிலையத்தில் ஆறுமுகம் புகார் அளித்தார். அதன்படி போலீசார் வழக்கு பதிந்து, ஆடுகளை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
கடந்த இரண்டு மாதங்களாக, சக்கரமநல்லூர், பழையனூர், ராஜபத்மாபுரம், சின்னம்மாபேட்டை உள்ளிட்ட பகுதிகளில், மாடு, ஆடுகள் திருடப்படுவது தொடர்வதால், கால்நடை வளர்ப்போர் அச்சமடைந்துள்ளனர்.
திருவாலங்காடு போலீசாரிடம் அளிக்கப்படும் புகார்கள் குறித்து, இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும், அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதனால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறும் அப்பகுதி மக்கள், கால்நடைகளை திருடுவோரை கண்டுபிடித்து, கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, திருவள்ளூர் எஸ்.பி., சாய் ப்ரணீத்திடம் கோரிக்கை கோரிக்கை விடுத்துள்ளனர்.
