/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அத்திப்பட்டில் 2,000 குடியிருப்புகளுக்கு வெள்ள அபாயம்!: சாம்பல் கழிவு, குறுகிய பாலத்தால் கால்வாய் அடைப்பு
/
அத்திப்பட்டில் 2,000 குடியிருப்புகளுக்கு வெள்ள அபாயம்!: சாம்பல் கழிவு, குறுகிய பாலத்தால் கால்வாய் அடைப்பு
அத்திப்பட்டில் 2,000 குடியிருப்புகளுக்கு வெள்ள அபாயம்!: சாம்பல் கழிவு, குறுகிய பாலத்தால் கால்வாய் அடைப்பு
அத்திப்பட்டில் 2,000 குடியிருப்புகளுக்கு வெள்ள அபாயம்!: சாம்பல் கழிவு, குறுகிய பாலத்தால் கால்வாய் அடைப்பு
ADDED : செப் 01, 2024 11:14 PM

மீஞ்சூர்: தனியார் நிறுவனங்களின் வசதிக்காக மழைநீர் செல்லும் கால்வாய்களின் குறுக்கே, சாலைகளுக்காக அமைக்கப்பட்ட குறுகிய பாலங்கள் மற்றும் குவிந்து கிடக்கும் சாம்பல் கழிவுகளால், மழைநீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலங்களில், 2,000 குடியிருப்புகள் மூழ்குவதால், குடியிருப்புவாசிகள் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.
மீஞ்சூர் ஒன்றியம், அத்திப்பட்டு பகுதியில், 2,000க்கும் அதிகமான குடியிருப்புகள் உள்ளன.
மழைக்காலங்களில் இந்த குடியிருப்புகளில் இருந்தும், நந்தியம்பாக்கம், செப்பாக்கம் கிராமங்களில் இருந்தும் வெளியேறும் மழைநீர், அத்திப்பட்டு பகுதியில் உள்ள வடிகால்வாய்கள் வழியாக, பகிங்ஹாம் கால்வாயை அடைகிறது.
புதிய சாலைகள்
கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் வரை, இப்பகுதிகளில் இருந்து மழைநீர் சீராக வெளியேறி வந்தது. அப்பகுதியில் உள்ள தனியார் சிமென்ட் தொழிற்சாலை, கன்டெய்னர் கிடங்கு நிறுவனங்களின் வசதிக்காக புதிதாக சாலைகள் அமைக்கப்பட்டன.
இதற்காக மழைநீர் செல்லும் வடிகால்வாய்களின் குறுக்கே, சிறிய சிமென்ட் உருளைகளை பதித்து பாலங்கள் அமைத்து, அதன் மீது சாலை அமைக்கப்பட்டன.
கால்வாய்கள் அகலமாக உள்ள நிலையில், பாலங்கள் மிகவும் குறுகலாக அமைக்கப்பட்டதால், மழைநீர் சீராக செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது.
வடசென்னை அனல்மின் நிலையத்தில் இருந்து வெளியேற்றப்படும் சாம்பல் கழிவுகள் தண்ணீருடன் கலந்து, இரும்பு உருளைகள் வழியாக செப்பாக்கம் கிராமத்தில் கொண்டு வந்து குவிக்கப்படுகிறது.
இந்த இரும்பு உருளைகளும், மழைநீர் செல்லும் கால்வாயை ஒட்டி அமைக்கப்பட்டு உள்ளது. இரும்பு உருளைகளில் அவ்வப்போது ஏற்படும் உடைப்புகளால், சாம்பல் கழிவுகள் கால்வாய்களில் குவிகிறது.
குறுகிய பாலங்கள், கால்வாய்களில் குவிந்து கிடக்கும் சாம்பல் கழிவுகள் ஆகியவற்றால் மழைக்காலங்களில் ஆர்ப்பரித்து வரும் மழைநீர், சீராக வெளியேறி பகிங்ஹாம் கால்வாயை சென்றடைய வழியின்றி, அத்திப்பட்டு பகுதியில் உள்ள குடியிருப்புகளை சூழ்ந்து விடுகிறது. ஊராட்சி நிர்வாகம் தற்காலிக தீர்வாக, மழைக்காலங்களில் சிறிய பாலங்களில் அடைப்புகளை நீக்கி தண்ணீரை வெளியேற்றுகிறது.
இரண்டு, மூன்று நாட்கள் மழைநீர் வெளியேறும் நிலையில், அதற்குள் குடியிருப்புவாசிகள் தங்கள் உடைமைகளை இழந்து தவிக்கும் நிலை ஏற்படுகிறது.
ஆண்டுதோறும் இதேநிலை தொடர்வதால், குடியிருப்புவாசிகள் பெரும் இன்னலுக்கு ஆளாகி தவிக்கின்றனர். இதற்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தாத அதிகாரிகள் மீது அதிருப்தியில் உள்ளனர்.
இதுகுறித்து குடியிருப்புவாசிகள் கூறியதாவது:
கடந்த 2022 மழையின்போது பெரும் பாதிப்பிற்கு ஆளாகினோம். கால்வாய்களின் குறுக்கே உள்ள சாலைகளை வெட்டி எடுக்க திட்டமிட்டோம்.
அதற்குள் அதிகாரிகள், சிமென்ட் தொழிற்சாலை மற்றும் செப்பாக்கத்தில் உள்ள கன்டெய்னர் கிடங்கு நிர்வாகிகள், கால்வாயின் குறுக்கே உள்ள சிறிய பாலங்களை அகற்றிவிட்டு, பெரிதாகவும், உயரமாகவும் அமைத்து தருவதாக உறுதியளித்தனர்.
இரண்டு ஆண்டுகள் முடியும் நிலையில், இதுவரை அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கால்வாய்கள் துார்ந்தும், சிறுபாலங்களில் சாம்பல் கழிவுகள் குவிந்து அடைந்து கிடக்கிறது.
இந்த ஆண்டு மழையின் போது, குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்ததால், கால்வாய்களின் குறுக்கே உள்ள சாலைகளை நிச்சயம் அகற்ற வேண்டிய நிலை உருவாகும்.
அதற்கு தயார் நிலையில் உள்ளோம். மக்களின் மனநிலையை அறிந்து, மாவட்ட நிர்வாகம், சம்பந்தப்பட்ட தொழில் நிறுவனங்களுக்கு உரிய அறிவுறுத்தல்களை உடனடியாக வழங்கி, குறுகிய பாலங்களை விரிவுபடுத்தவும், சாம்பல் கழிவுகளை அகற்றி துார்வாரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.