/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கலைஞர் கனவு திட்ட பயனாளர் 847 பேருக்கு... 'பெப்பே!':அடுத்தாண்டுக்கு வீடு கட்ட அனுமதி என தள்ளிவைப்பு
/
கலைஞர் கனவு திட்ட பயனாளர் 847 பேருக்கு... 'பெப்பே!':அடுத்தாண்டுக்கு வீடு கட்ட அனுமதி என தள்ளிவைப்பு
கலைஞர் கனவு திட்ட பயனாளர் 847 பேருக்கு... 'பெப்பே!':அடுத்தாண்டுக்கு வீடு கட்ட அனுமதி என தள்ளிவைப்பு
கலைஞர் கனவு திட்ட பயனாளர் 847 பேருக்கு... 'பெப்பே!':அடுத்தாண்டுக்கு வீடு கட்ட அனுமதி என தள்ளிவைப்பு
ADDED : நவ 28, 2024 08:33 PM
திருவாலங்காடு:திருவள்ளூர் மாவட்டத்தில் 2024-- - 25ம் ஆண்டு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில், 4,842 பயனாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். தற்போது, 847 பயனாளர்களுக்கு நிதி ஒதுக்காமல், அடுத்தாண்டு பயனாளராக சேர்க்கப்பட்டுள்ளதால் அதிருப்தி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில், 2030க்குள் 'குடிசையில்லா தமிழ்நாடு' என்ற இலக்கை அடைவது, கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் நோக்கம். இத்திட்டத்தின் கீழ் ஏற்கனவே வீடு வழங்க கோரி கலைஞர் வீடு வழங்கும் திட்டம், புதிய குடிசைகள் கணக்கெடுப்பு திட்டம், அனைவருக்கும் வீடு திட்ட கணக்கெடுப்புகளில் பதிவு செய்தோர் பயனாளிகளாக கருதப்படுவர்.
இந்த கணக்கெடுப்பு திட்டங்களின் கீழ் ஊராட்சியின் இலக்கிற்கேற்ப தகுதியான பயனாளிகளை கிராம ஊராட்சி அளவிலான குழு இறுதி செய்யும்.
குழு உறுப்பினர்களாக ஊராட்சி தலைவர், வார்டு உறுப்பினர், ஒன்றிய பொறியாளர், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர், ஒன்றிய பணி மேற்பார்வையாளர் ஆகியோர் உள்ளனர்.
இந்த குழு ஒப்புதல் அளித்த பயனாளிகளுக்கு வீடு ஒதுக்கீடு செய்ய, சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சிகளில், கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும்.
இறுதி செய்யப்பட்ட பயனாளி விபரத்தை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் இருந்து அறிக்கை பெறப்பட்டு, மாவட்ட கலெக்டர் வாயிலாக நிர்வாக அனுமதி வழங்கப்படும். பின், வட்டார வளர்ச்சி அலுவலர்களால் சம்பந்தப்பட்ட பயனாளிகள் பணி உத்தரவு வழங்கப்பட்டு, வீடு கட்டும் பணி துவங்கப்படும்.
கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு பயனாளிக்கு 360 சதுரடியில் 300 சதுரடி கான்கிரீட் தளத்துடனும், 60 சதுரடி பயனாளியின் விருப்பப்படி சாய்தள கூரை அமைத்துக் கொள்ளலாம். வீடு ஒன்றுக்கு 3.10 லட்சம் ரூபாய் மானிய தொகையாக வழங்கப்படும்.
இதை தவிர, மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ், மனித சக்தி நாட்கள் ஊதியமாக வீடு கட்டும் பணிக்கும், 90 நாட்களுக்கு 28,710 கழிப்பறைக்கு, 10 நாட்களுக்கு 3,190 ரூபாய் வழங்கப்படும்.
கழிப்பறை கட்டுவதற்கு 12,000 ரூபாய் மானிய தொகை தனியாக வழங்கப்படும். மொத்தம் 3 லட்சத்து 53,900 ரூபாய் பயனாளிக்கு வழங்கப்படும்.
இத்திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகளுக்கு பயனாளி விருப்பத்திற்கேற்ப செங்கல், சிமென்ட் கற்களை கொண்டு, கான்கிரீட் துாண்கள் கொண்ட அமைப்பில் அரசால் வழங்கப்பட்ட, நான்கு வடிவமைப்பில், ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி வீடுகள் கட்டிக் கொள்ளலாம்.
அதன்படி, திருவள்ளூர் மாவட்டத்தில், 2024- -- 25ல், 4,842 வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பணி துவங்கியது. இதில், பல்வேறு காரணங்களால், 847 பேர், அடுத்தாண்டு பயனாளராக சேர்க்கப்பட்டுள்ளதால் அதிருப்தி அடைந்துள்ளனர்.
அரசுக்கு நிதி தட்டுப்பாடு இருப்பதால், தமிழகம் முழுதும் ஆயிரக்கணக்கான கலைஞர் கனவு இல்ல வீடுகளை கட்டாமல், அடுத்த நிதியாண்டுக்கு மாற்றியுள்ளது. இதனால், ஆயிரக்கணக்கான பயனாளர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
ஒரு வீட்டிற்கு 140 மூட்டைகள் தரமான சிமென்ட், 'டான்செம்' அரசு நிறுவனத்திடமிருந்து பெற்று வழங்கப்படும். மேலும், 320 கிலோ இரும்பு கம்பிகளும் வழங்கப்படும்.