ADDED : ஜூன் 09, 2025 11:47 PM
திருத்தணி, திருத்தணி ஒன்றியம் மத்துார் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில், 600க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படித்து வருகின்றனர்.
மாணவர்களுக்கு போதிய வகுப்பறை வசதி இல்லாததால், நபார்டு திட்டத்தின் கீழ், 3.47 கோடி ரூபாய் மதிப்பில், 14 வகுப்பறை கொண்ட புதிய கட்டடம் கடந்தாண்டு கட்டு முடிக்கப்பட்டது.
புதிய கட்டடத்திற்கு மின் இணைப்பு பெறாமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டி வந்ததால், ஆறு மாதங்களாக புதிய வகுப்பறை கட்டடம் பயன்பாட்டிற்கு வராமல் பூட்டியே கிடந்தது. இதுகுறித்து நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதை தொடர்ந்து, மின் இணைப்பு வழங்கப்பட்டது. நேற்று புதிய பள்ளி வகுப்பறைகளை திருத்தணி தி.மு.க.,- எம்.எல்.ஏ., சந்திரன் திறந்து வைத்தார்.
அதே கிராமத்தில் 13.30 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய ரேஷன் கடை கட்டுவதற்கு எம்.எல்.ஏ., அடிக்கல் நட்டு, பணியை துவக்கி வைத்தார்.