/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சரளை கற்கள் பெயர்ந்த தாங்கல் பெரும்புலம் சாலை
/
சரளை கற்கள் பெயர்ந்த தாங்கல் பெரும்புலம் சாலை
ADDED : ஜன 03, 2025 02:08 AM

பொன்னேரி:பொன்னேரி - பழவேற்காடு சாலையில் உள்ள, இடையன்குளம் பேருந்து நிறுத்தம் பகுதியில் துவங்கி, தாங்கல் பெரும்புலம் கிராமம் வரை, 6 கி.மீ., தொலைவிற்கான சாலை போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.
சாலை முழுதும், பள்ளங்கள் ஏற்பட்டும், சரளை கற்கள் பெயர்ந்தும் உள்ளன. மழைக்காலங்களில் பள்ளங்களில் மழைநீர் தேங்குகிறது. 10 ஆண்டுகளாக இந்த சாலை, புதுப்பிக்கப்படாமல் இருக்கிறது.
இதனால், இடையன்குளம், தாங்கல் பெரும்புலம் கிராமங்களில் வசிப்பவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். கல்வி, மருத்துவம், தொழில் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு கிராமவாசிகள், பொன்னேரி மற்றும் பழவேற்காடு செல்வதற்கு இந்த சாலையை மட்டும் பயன்படுத்தும் நிலையில் அவர்கள் தினம் தினம் தடுமாற்றத்துடன் பயணம் மேற்கொள்கின்றனர்.
இரவு நேர பயணங்களின் போது நிலைதடுமாறி விழுந்து சிறு சிறு விபத்துகளுக்கு உள்ளாகின்றனர்.
உயர்கல்விக்கு சைக்கிள்களில் செல்லும் மாணவர்கள், ஒத்தையடி பாதையாக உள்ள பகுதிகளில் பயணிக்கின்றனர். அவசர உதவிக்கு ஆட்டோ, ஆம்புலன்ஸ் வாகனங்களும் வர தயங்குகின்றன. இருசக்கர வாகனங்களில் பயணிப்பவர்கள், 6 கி.மீ., துாரத்தை, 30 நிமிடங்கள் பயணிக்கும் நிலை உள்ளது.
மேற்கண்ட சாலையை புதுப்பிக்க மீஞ்சூர் ஒன்றிய நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராமவாசிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.