/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடு விவசாயி பெயரில் வியாபாரிகள் ஆதிக்கம்
/
அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடு விவசாயி பெயரில் வியாபாரிகள் ஆதிக்கம்
அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடு விவசாயி பெயரில் வியாபாரிகள் ஆதிக்கம்
அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடு விவசாயி பெயரில் வியாபாரிகள் ஆதிக்கம்
ADDED : செப் 30, 2025 12:59 AM

திருத்தணி:திருவள்ளூர் மாவட்டத்தில் திறக்கப்பட்டுள்ள அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில், விவசாயிகள் என்ற போர்வையில் நெல்வியாபாரிகள் ஆந்திர மாநிலத்தில் இருந்து நெல் மூட்டைகள் கொண்டு வந்து அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர். இதற்கு ஆளும் கட்சி நிர்வாகிகள் உடந்தையாக உள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள, 14 ஒன்றியங்களில் சொர்ணவாரி பருவத்தில், விவசாயிகள் மொத்தம், 64,500 ஏக்கர் பரப்பில் நெல் பயிரிட்டுள்ளனர். தற்போது நெல் அறுவடை துவங்கி துரித வேகத்தில் நடந்து வருகிறது.
முன்னுரிமை விவசாயிகள் நலன்கருதி, மாவட்டத்தில், 64 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறந்து, விவசாயிகளிடம் இருந்து முன்னுரிமை அடிப்படையில், 7.50 கோடி கிலோ நெல் கொள்முதல் செய்வதற்கு திட்டமிட்டுள்ளன.
இதுவரை நான்கு கோடி கிலோ நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளன. சில கொள்முதல் நிலையங்களில், விவசாயிகள் என்ற போர்வையில், வியாபாரிகள் ஆந்திர மாநிலத்தில் நெல் மூட்டைகளை குறைந்த விலைக்கு வாங்கி வந்து, திருவள்ளூர் மாவட்டத்தில் செயல்படும் நேரடி கொள்முதல் நிலையங்களில் அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர்.
அதாவது, சன்னரக நெல் ஒரு கிலோ 25.45 ரூபாய், குண்டுரக நெல் ஒரு கிலோ, 25 ரூபாய் என விலை நிர்ணயம் செய்து, விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்கின்றனர்.
ஆந்திராவில் இருந்து ஒரு கிலோ நெல், 15 ரூபாய்க்கு வாங்கி வந்து திருவள்ளூர் மாவட்டத்தில் கொள்முதல் நிலையத்தில், 25 ரூபாய் விற்பனை செய்கின்றனர்.
கோரிக்கை உதாரணமாக திருத்தணி, பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை மற்றும் திருவாலங்காடு ஆகிய நான்கு ஒன்றியங்களும் ஆந்திர மாநில எல்லையில் உள்ளதால், சித்துார் மாவட்டம், நகரி, தடுக்குப்பேட்டை, கார்வேட்நகரம் உள்பட பகுதிகளில் வியாபாரிகள் நெல் மூட்டைகள் வாங்கி வந்து, கொள்முதல் நிலையங்களில், தமிழக விவசாயிகள் பெயர்களில் விற் பனை செய்கின்றனர்.
இதற்காக, வியாபாரிகள், விவசாயிகளுக்கு ஒரு மூட்டைக்கு, 40 ரூபாய் முதல், 60 ரூபாய் வரை கொடுக்கின்றனர். இதனால் உண்மையான விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே மாவட்ட கலெக்டர் விரைந்து நடவடிக்கை எடுத்து, நேரடி கொள்முதல் நிலையங்களில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.