/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பிளாஸ்டிக் சேகரிப்பு திட்டம் கண்துடைப்பா? பிரத்யேக குழு அமைத்தால் மட்டுமே தீர்வு
/
பிளாஸ்டிக் சேகரிப்பு திட்டம் கண்துடைப்பா? பிரத்யேக குழு அமைத்தால் மட்டுமே தீர்வு
பிளாஸ்டிக் சேகரிப்பு திட்டம் கண்துடைப்பா? பிரத்யேக குழு அமைத்தால் மட்டுமே தீர்வு
பிளாஸ்டிக் சேகரிப்பு திட்டம் கண்துடைப்பா? பிரத்யேக குழு அமைத்தால் மட்டுமே தீர்வு
ADDED : மே 25, 2025 08:09 PM
திருவாலங்காடு:மண்வளத்தை நாசமாக்கி, சுற்றுச்சூழலுக்கு பெரும் சவாலாக மாறியுள்ள பிளாஸ்டிக்கை ஒழிக்கும் முயற்சியாக, மாதந்தோறும் கடைசி சனிக்கிழமை, பிளாஸ்டிக் சேகரிப்பு மற்றும் சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ள வேண்டும் என, கடந்த ஜன., மாதம் தமிழக அரசு உத்தரவிட்டது.
அதன்படி, திருவள்ளூர் மாவட்டத்தில் ஆவடி நகராட்சி, திருத்தணி, பொன்னேரி, திருவள்ளூர், திருநின்றவூர், திருவேற்காடு, பூந்தமல்லி உட்பட ஆறு நகராட்சிகள், திருவாலங்காடு, பூண்டி, சோழவரம் உட்பட 14 ஒன்றியங்கள் 526 ஊராட்சிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.
நீர்நிலையோரம், கோவில் வளாகம் உள்ளிட்ட இடங்களில், திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாசு கட்டுப்பாடு வாரியத்தினர் இணைந்து இப்பணி மேற்கொண்டனர்.
அந்தந்த பகுதியில் உள்ள உள்ளாட்சி துாய்மை பணியாளர்கள், வனத்துறையினர் மற்றும் கல்லுாரி மாணவர்கள் என, பலரும் கைகோர்த்தனர். டன் கணக்கில் பிளாஸ்டிக் கழிவு சேகரிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டன.
இருப்பினும், இப்பணியில் தொடர்ச்சியான கண்காணிப்பு இல்லாததால், பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்திருக்கிறது. திருவள்ளூர் நகரம் மற்றும் கிராமங்களில், துணிப்பை பயன்படுத்துவது குறைந்து, பிளாஸ்டிக் பை மற்றும் அதுதொடர்பான பொருட்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது.
எங்கும், எதிலும் பிளாஸ்டிக் என்ற நிலை தான் உருவாகியுள்ளது. சாலையோரம், குளம், குட்டைகளில் அதிகளவில் பிளாஸ்டிக் கழிவு சூழ்ந்து கிடக்கின்றன.
உள்ளாட்சி நிர்வாகத்தினர், உணவு பாதுகாப்புத் துறையினர் என, ஒரு சில துறையினர் மட்டுமே, கடை, ஹோட்டல், வணிக நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டு, பிளாஸ்டிக் பயன்பாட்டை கண்காணிப்பது, பறிமுதல் செய்வது, அப்புறப்படுத்துவது என்பது, நடைமுறைக்கு சாத்தியமில்லாத ஒன்றாக உள்ளது.
இதற்கு காரணம், அத்துறைகளில் பணியாளர் பற்றாக்குறை என்பது அதிகம். எனவே, கடைகள், ஹோட்ட, வர்த்தக நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில் ஆய்வு மேற்கொண்டு, அபராதம் விதிப்பது, பறிமுதல் செய்வது, அவற்றின் விற்பனையை தடுப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள அனைத்து துறை அலுவலர்களையும் உள்ளடக்கிய பிரத்யேக குழுக்கள் அமைக்க வேண்டும்.
மேலும், சுழற்சி முறையில் இப்பணியில் ஈடுபடுத்தினால், தொடர்ச்சியான கண்காணிப்பு இருக்கும். அப்போது, பிளாஸ்டிக் பயன்பாடு கட்டுக்குள் வரும் என, சமூக ஆர்வலர்கள் யோசனை தெரிவிக்கின்றனர்.

