/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சோழவரம் ஏரியில் முழு கொள்ளளவு தண்ணீர்... தேக்கி வைப்பது 'டவுட்' சீரமைக்கப்பட்ட கரைகள் உள்வாங்கியதால் அதிர்ச்சி
/
சோழவரம் ஏரியில் முழு கொள்ளளவு தண்ணீர்... தேக்கி வைப்பது 'டவுட்' சீரமைக்கப்பட்ட கரைகள் உள்வாங்கியதால் அதிர்ச்சி
சோழவரம் ஏரியில் முழு கொள்ளளவு தண்ணீர்... தேக்கி வைப்பது 'டவுட்' சீரமைக்கப்பட்ட கரைகள் உள்வாங்கியதால் அதிர்ச்சி
சோழவரம் ஏரியில் முழு கொள்ளளவு தண்ணீர்... தேக்கி வைப்பது 'டவுட்' சீரமைக்கப்பட்ட கரைகள் உள்வாங்கியதால் அதிர்ச்சி
ADDED : நவ 10, 2025 10:48 PM

சோழவரம்: சென்னையின் குடிநீர் ஆதாரங்களில் ஒன்றான சோழவரம் ஏரியின் கரைகள், 40 கோடி ரூபாயில் சீரமைக்கப்பட்ட நிலையில், தற்போது புதுப்பிக்கப்பட்ட இடங்களில் கரைகள் உள்வாங்கி சேதமடைந்தும், விரிசல்கள் ஏற்பட்டும் இருப்பதால், முழு கொள்ளளவு தண்ணீரை தேக்கி வைப்பது கேள்விக்குறியாகி உள்ளது. சென்னையின் குடிநீர் ஆதாரங்களில் ஒன்றான சோழவரம் ஏரி, 1.08 டி.எம்.சி., கொள்ளளவு உடையது. இங்குள்ள கரைகள் அடிக்கடி சேதமடைந்து, மண் சரிவு ஏற்பட்டது. கடந்த 2023ல் கரைகள் உடையும் அபாயமும் இருந்தது.
இதையடுத்து, மத்திய - மாநில அரசுகளின் நீர்வளத்துறை அதிகாரிகள் மற்றும் நீரியல் வல்லுநர்கள் ஆய்வு மேற்கொண்டு, பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர். பின், சோழவரம் ஏரியின் கரை சீரமைப்பு பணிகளுக்கு, தமிழக அரசு 40 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது.
கடந்தாண்டு, இதற்கான பணிகள் துவங்கப்பட்டன. மொத்தமுள்ள, 3.5 கி.மீ., நீளம் கொண்ட ஏரியின் கரையில், அதிக பாதிப்புள்ள பகுதிகள் கண்டறியப்பட்டு, 1.04 கி.மீ.,க்கு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
நீர்வரத்து அதிகரிப்பு ஏரியின் உள்பகுதி கரையோரத்தில், 6 மீ., உயரத்தில் கான்கிரீட் சுவரும், அதிலிருந்து, 30 மீ., சரிவாக பாறை கற்களும் பதிக்கப்பட்டன.
கீழ்பகுதியில் தண்ணீர் தேங்கும் இடங்களில், கரை பலவீனம் அடைவதை தடுக்க, நவீன தொழில்நுட்பமான 'டி - வால்' எனப்படும் நீர்கசிவு தடுப்புச்சுவர், கரையின் மேல்பகுதியில், 1 மீ., உயரத்தில் அலை தடுப்புச்சுவர், 15 மீ., அகலத்தில் பாதை ஆகியவை ஏற்படுத்தப்பட்டன.
இப்பணிகளை மேற்கொள்வதற்காக, கடந்தாண்டு ஏரியில், 10 - 20 சதவீதம் தண்ணீர் மட்டுமே தேக்கி வைக்கப்பட்டது. கரை சீரைமப்பு பணிகள் முடிந்த நிலையில், நடப்பாண்டு ஏரியில் முழு கொள்ளளவு தண்ணீரை தேக்கி வைக்க நீர்வளத்துறையினர் திட்டமிட்டு இருந்தனர்.
அதற்கேற்ப, வட கிழக்கு பருவமழை தீவிர மடைந்ததால், ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது. நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்தது. நேற்றைய நிலவரப்படி ஏரியில், 0.79 டி.எம்.சி., தண்ணீர் தேங்கியுள்ளது. கடந்தாண்டு இதே நாளில், 0.08 டி.எம்.சி., மட்டுமே இருந்தது.
வரும் 15ம் தேதிக்கு பின், கனமழைக்கான வாய்ப்புகள் இருப்பதால், ஏரி முழு கொள்ளளவு எட்டும் நிலை உள்ளது. இந்நிலையில், சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்ட இடங்கள், ஆங்காங்கே சேதமடைந்து உள்ளன.
வாய்ப்பு கரையின் மேற்பகுதிகளில் விரிசல்கள் ஏற்பட்டும், உள்வாங்கியும் உள்ளன. கான்கிரீட் கட்டுமானங்களும் சேதமடைந்துள்ளன. சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்ட பகுதி முழுதும், கரைகள் உள்வாங்கி உறுதித்தன்மை கேள்விக் குறியாகி உள்ளது.
கரை கள் சேதமடைந்து இருப்பதால், முழு கொள்ளளவிற்கு தண்ணீர் தேக்கும்போது, அசம்பாவிதங்களுக்கு வாய்ப்பு உள்ளது. இதனால், திட்டமிட்டபடி ஏரியில் முழு கொள்ளளவு தண்ணீரை தேக்கி வைக்கும் வாய்ப்பு மிகவும் குறைவாக உள்ளது. மேலும், தற்போதைய நிலையே தொடரும் எனவும், இதற்கு மேல் கூடுதலாக தேக் க வாய்ப்பு இருக்காது எனவும் கூறப்படுகிறது. கரைகள் விரிசல் ஏற்பட்டு உள்ள பகுதிகளில் மணல், சிமென்ட் மற்றும் ரசாயனம் கலந்த கலவையை போட்டு, ' பேட்ச் ஒர்க்' பணிகள் நடைபெறுகிறது.
இது, எந்தளவிற்கு பயன் தரும் என்பதும் கேள்விக்குறியாக உள்ளது. கரை சீரமைப்பு பணிகளுக்காக, 40 கோடி ரூபாய் செலவிடப்பட்ட நிலையில், முதல் மழைக்கே கரைகள் சேதமடைந்து இருப்பது, சமூக ஆர்வலர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்திஉள்ளது.
இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
ஏரியில் முழு கொள்ளளவு தண்ணீர் தேக்கி வைப்பதற்கு மு ன்பே, கரைகள் உள்வாங்கி சேதமடைந்து உள்ளன. கனமழை பெய்தால் மேலும் சேதமாகும் வாய்ப்புள்ளது. இதனால், ஏரியை சுற்றியுள்ள கிராமங்களில் அச்சம் நிலவுகிறது.
தற்காலிக சீரமைப்பு பணிகள் பயன்தராது. சேதமடைந்த பகுதிகளை முழுமையாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

