/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பழங்குடியினர் வீடுகள் கட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள்... தயக்கம்: தனி அலுவலர் வசம் நிர்வாகம் இருப்பதால் கைவிரிப்பு; நடப்பாண்டில் 1,774க்கு 710 வீட்டு பணிகளே நிறைவு
/
பழங்குடியினர் வீடுகள் கட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள்... தயக்கம்: தனி அலுவலர் வசம் நிர்வாகம் இருப்பதால் கைவிரிப்பு; நடப்பாண்டில் 1,774க்கு 710 வீட்டு பணிகளே நிறைவு
பழங்குடியினர் வீடுகள் கட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள்... தயக்கம்: தனி அலுவலர் வசம் நிர்வாகம் இருப்பதால் கைவிரிப்பு; நடப்பாண்டில் 1,774க்கு 710 வீட்டு பணிகளே நிறைவு
பழங்குடியினர் வீடுகள் கட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள்... தயக்கம்: தனி அலுவலர் வசம் நிர்வாகம் இருப்பதால் கைவிரிப்பு; நடப்பாண்டில் 1,774க்கு 710 வீட்டு பணிகளே நிறைவு
ADDED : நவ 23, 2025 02:55 AM

திருத்தணி,: பழங்குடியினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட வீடுகளை கட்டுவதற்கு, முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் தன்னார்வலர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். ஊராட்சி நிர்வாகம் தனி அலுவலர் வசம் இருப்பதால், தவணை தொகை வழங்குவதில் காலதாமதம் ஏற்படுகிறது. இதனால், நடப்பாண்டில் 1,774 வீடுகள் ஒதுக்கப்பட்ட நிலையில், 710 வீடுகளுக்கு மட்டுமே கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ளன. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியங்களில், மொத்தம் 526 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் வசிக்கும் பழங்குடியின மக்கள், குடிசை வீடுகளில் வசித்து வருகின்றனர். இதனால், மழை வெள்ளத்தால் பழங்குடியினர் பரிதவித்து வந்தனர்.
தாராளம் இதையடுத்து, தகுதியான பழங்குடியினருக்கு பிரதமர் ஜன்மன் திட்டத்தில், கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுக்கும் திட்டத்தை, கடந்த 2023ல் மத்திய அரசு துவக்கியது.
இதற்கு, மாநில அரசு 2.80 லட்சம் ரூபாய், மத்திய அரசு 2.27 லட்சம் ரூபாய் என, மொத்தம் 5.07 லட்சம் ரூபாய் ஒதுக்குகிறது.
அதன்படி, 2023 - 24ம் ஆண்டில், திருவள்ளூர் மாவட்டத்தில் 499 வீடுகள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டு பணி நடந்தது. தன்னார்வலர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளால் பணி மேற்கொள்ளப்பட்டு, 489 வீடுகள் ஒப்படைக்கப்பட்டன. மீதமுள்ள 10 வீடுகள் கட்டும் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.
அதேபோல், 2024 - 25ம் ஆண்டு திட்டத்தின் கீழ், மாவட்டம் முழுதும், 1,774 பழங்குடியினருக்கு கான்கிரீட் வீடுகள் கட்டுவதற்கு ஆணை வழங்கப்பட்டுள்ளன. ஆனால், தற்போது வரை 710 வீடுகள் மட்டும், முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் தன்னார்வலர்கள் மூலம், 95 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன.
மீதமுள்ள, 1,064 பழங்குடியினருக்கு வீடுகள் கட்டி தருவதற்கு உள்ளாட்சி பிரதிநிதிகள், ஒப்பந்ததாரர்கள், தன்னார்வலர்கள் முன்வரவில்லை.
இதற்கு காரணம், உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவியில் இருந்த போது, ஊராட்சி நிதியை தாராளமாக செலவு செய்து உள்ளனர்.
நிறுத்தம் தற்போது, தனி அலுவலர்களிடம் நிர்வாகம் இருப்பதால், உள்ளாட்சி பிரதிநிதிகள், ஊராட்சி பணத்தை எடுக்க முடியாது. இதனால், வீடுகள் கட்டுவதற்கு தயக்கம் காட்டுகின்றனர். இதனால், 10 - 15 சதவீத பழங்குடியினர் போதிய நிதியுதவி இல்லாமல் பணிகளை நிறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து, திருவள்ளூர் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை அதிகாரி கூறியதாவது:
பழங்குடியினர், 300 சதுரடியில் வீடுகள் கட்ட, 130 சிமென்ட் மூட்டை, 320 கிலோ இரும்பு கம்பிகளை, ஒன்றிய நிர்வாகம் வழங்கி வருகிறது. பழங்குடியினரே வீடுகள் கட்டிக் கொள்ள வேண்டும்.
தவறும்பட்சத்தில், அவர்களின் விருப்பத்தின்படி உள்ளாட்சி பிரதிநிதிகள், ஒப்பந்ததாரர் மூலம் வீடுகள் கட்ட அனுமதிக்கிறோம். தற்போது, ஊராட்சி நிர்வாகத்திடம் இருந்து எவ்வித நிதியும் கிடைக்காததால், வீடுகள் கட்ட ஒப்பந்ததாரர்கள் தயக்கம் காட்டுகின்றனர்.
இருப்பினும், நாங்கள் ஒப்பந்ததாரரிடம், ஏழை பழங்குடியினருக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்து தருமாறு அறிவுறுத்தி வருகிறோம். மேலும், ஒப்பந்ததாரர்களை கட்டாயப்படுத்த முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.

