/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
எண்ணுார் துறைமுகத்தில் லாரி டிரைவர்கள் போராட்டம்
/
எண்ணுார் துறைமுகத்தில் லாரி டிரைவர்கள் போராட்டம்
ADDED : நவ 13, 2024 09:02 PM
மீஞ்சூர்:மீஞ்சூர் அடுத்த காட்டுப்பள்ளியில் எண்ணுார் காமராஜர் துறைமுகம் அமைந்துள்ளது. இங்கு எரிவாயு, பெட்ரோலிய பொருட்கள், கார்கள், எலக்ட்ரானிக் உள்ளிட்ட பல்வேறு சரக்குகள் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யப்படுகின்றன.
இதற்காக தினமும், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கனரக வாகனங்கள் வந்து செல்கின்றன. துறைமுகத்தில், சரக்குகளை கையாளும் பணியில் போதிய பணியாளர்கள் இல்லாததால், குறித்த நேரத்தில் லாரி டிரைவர்கள் கொண்டு வரும் அல்லது ஏற்றிச் செல்லும் சரக்குகளை கையாள முடியாத நிலை உள்ளது.
இதனால், லாரி டிரைவர்கள் நீண்ட நேரம் காத்திருந்து சிரமத்திற்கு ஆளாகின்றனர். நேற்று முன்தினம் நள்ளிரவு, லாரி டிரைவர்கள் துறைமுக வளாகத்தில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சரக்கு பெட்டிகளுடன் இருந்த லாரிகளை ஆங்காங்கே நிறுத்தினர்.
சரக்கு பெட்டகங்களை கையாள்வதற்கு தேர்ச்சி பெற்ற பணியாளர்கள் இல்லாததே தாமதத்திற்கு காரணம் எனவும், உரியவர்களை நியமித்து சரக்கு பெட்டிகளை விரைந்து கையாள வேண்டும் எனவும் டிரைவர்கள் வலியுறுத்தினர்.
இதையடுத்து, துறைமுக அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட லாரி டிரைவர்களுடன் பேச்சு நடத்தினர். அதிகாரிகளின் பேச்சுவார்த்தையை தொடர்ந்து, லாரி டிரைவர்கள் போராட்டத்தை கைவிட்டு பணியை தொடர்ந்தனர். இதனால், துறைமுக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

