/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பொன்னேரியில் கட்சிக்கொடி கம்பங்கள் அகற்றம் நீதிமன்ற உத்தரவால் நகராட்சி நடவடிக்கை
/
பொன்னேரியில் கட்சிக்கொடி கம்பங்கள் அகற்றம் நீதிமன்ற உத்தரவால் நகராட்சி நடவடிக்கை
பொன்னேரியில் கட்சிக்கொடி கம்பங்கள் அகற்றம் நீதிமன்ற உத்தரவால் நகராட்சி நடவடிக்கை
பொன்னேரியில் கட்சிக்கொடி கம்பங்கள் அகற்றம் நீதிமன்ற உத்தரவால் நகராட்சி நடவடிக்கை
ADDED : ஏப் 26, 2025 02:18 AM

பொன்னேரி:உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிற்கு ஏற்ப, பொது இடங்களில் உள்ள அரசியல் கட்சி மற்றும் அமைப்புகளின் கொடி கம்பங்களை அகற்றும் பணியில் பொன்னேரி நகராட்சி நிர்வாகம் ஈடுபட்டு உள்ளது.
தமிழகம் முழுதும் பொது இடங்கள், தேசிய, மாநில நெடுஞ்சாலைகள், உள்ளாட்சிக்கு சொந்தமான இடங்களில் அனைத்து கட்சி, சமுதாய அமைப்புகளின் சார்பில் நிரந்தரமாக பொருத்தப்பட்டு உள்ள கொடிக்கம்பங்களை, 12 வாரங்களுக்குள் அகற்ற, உயர்நீதிமன்ற மதுரை கிளை ஜனவரி 27ம் தேதி உத்தரவிட்டு இருந்தது.
தவறினால் சம்பந்தப்பட்ட கட்சி மற்றும் அமைப்புகளுக்கு நோட்டீஸ் அளித்து அடுத்த, இரண்டு வாரங்களில் கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டும் எனவும், இதற்கான செலவுகளை சம்பந்தப்பட்ட கட்சி அல்லது அமைப்பிடம் வசூலிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
மேலும், அரசியல் கட்சி மற்றும் அமைப்புகள் சார்பில் பொது இடங்களில் நிரந்தரமாக கட்சி கொடிக் கம்பங்கள் அமைக்க எந்த அதிகாரியும் அனுமதி வழங்கக் கூடாது எனவும், முறையாக அனுமதி பெற்று அவர்களுக்கு சொந்தமான இடங்களில் கொடிக் கம்பங்களை வைத்து கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டத்திற்கு உட்பட்ட மீஞ்சூர், சோழவரம், பழவேற்காடு உள்ளிட்ட பகுதிகளில், 135 பொது இடங்களில் கொடிக்கம்பங்கள் உள்ளன.
நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரதாப் கொடிக்கம்பங்களை அகற்ற அனைத்து உள்ளாட்சிகளுக்கும் அறிவுறுத்தினார்.
அதை தொடர்ந்து, பொன்னேரி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்த கட்சி மற்றும் அமைப்புகளின் கொடிக்கம்பங்களை அகற்றும் பணி நேற்று மேற்கொள்ளப்பட்டது
பழைய பேருந்துநிலையம், அரசு பேருந்து பணிமனை, புதிய பேருந்து நிலையம், சின்னகாவணம் உள்ளிட்ட பகுதிகளில், 35 கொடிக்கம்பங்கள் உள்ளன.
இவற்றை கடந்த மார்ச் 31ம் தேதிக்குள் அகற்றி கொள்ளும்படி நகராட்சி நிர்வாகம் சார்பில், சம்மந்தப்பட்ட அரசியல் கட்சி மற்றும் சமுதாய அமைப்புகளுக்கு கடிதம் வழங்கப்பட்டது.
கெடு முடிந்து, 25நாட்கள் ஆன நிலையிலும், கொடிக்கம்பங்கள் மற்றும் பீடங்கள் அகற்றப்படாமல் இருந்தன.
அதையடுத்து, நேற்று நகராட்சி அலுவலர்கள், காவல் மற்றும் வருவாய்த்துறையினருடன் இணைந்து, கொடிக்கம்பங்கள் மற்றும் பீடங்களை பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் இடித்து அகற்றும் பணிகளை மேற்கொண்டனர்.
உயர்நீதி மன்ற உத்தரவால் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இடையே வரவேற்பை பெற்று உள்ளது.
பொது இடங்களில் கட்சி மற்றும் சமுதாய அமைப்புகளின் கொடிக்கம்பங்களை மீண்டும் வைக்க கூடாது. நீதிமன்ற உத்தரவை மீறினால், உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, பொன்னேரி நகராட்சி கமிஷனர் தெரிவித்துள்ளார்.