/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஏரிகள் பராமரிப்பு, குடிமராமத்து பணிக்கு ஐந்து ஆண்டுகளாக நிதி ஒதுக்கீடு இல்லை மழைநீர் சேமிப்பதில் சிக்கல்

ADDED : மே 23, 2025 10:06 PM
திருத்தணி:திருத்தணி வருவாய் கோட்டத்தில் திருத்தணி, திருவாலங்காடு, ஆர்.கே.பேட்டை மற்றும் பள்ளிப்பட்டு ஆகிய ஒன்றியத்தில் உள்ள 79 ஏரிகளை, திருத்தணி நீர்வளத் துறையினர் பராமரித்து வருகின்றனர்.
ஏரிகளை துார்வாருதல், கரைகள் பலப்படுத்துதல், மதகுகள் சீரமைத்தல், நீர்வரத்து கால்வாய், கடைவாசல் கால்வாய் பராமரிப்பு உள்ளிட்ட பணிகளை, நீர்வளத் துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
ஒவ்வொரு பருவமழைக்கு முன்னதாக, நீர்வளத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, ஏரிகளில் ஏற்பட்டுள்ள சேதம் மற்றும் நீர்வரத்து கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி, ஏரிக்கு மழைநீர் வரும் வகையில் தயார்படுத்தும் பணியில் ஈடுபடுவர்.
மதகு ஓட்டைகள், கடைவாசல் சேதம் மற்றும் கரைகள் உடைப்பு ஏற்பட்டால், அவற்றை தடுத்து நிறுத்துவதற்கு, மணல் மூட்டைகளை தயார் நிலையில் வைத்திருப்பர்.
திருத்தணி கோட்டத்தில் உள்ள 79 ஏரிகளின் பராமரிப்பு மற்றும் குடிமராமத்து பணிகளை, ஐந்து ஆண்டுகளாக நீர்வளத் துறை அதிகாரிகள் மேற்கொள்ளவில்லை. இதற்கு காரணம், ஐந்து ஆண்டுகளாக ஏரிகளை சீரமைப்பதற்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை.
இதனால், பெரும்பாலான ஏரிகளின் மதகு, கடைவாசல் சேதம், ஏரிக்கரைகள் பலவீனம் மற்றும் நீர்வரத்து கால்வாய்கள் சேதமடைந்துள்ளன. எனவே, தண்ணீரை சேமிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
எனவே, கலெக்டர் விரைந்து நடவடிக்கை எடுத்து, ஏரிகளை பராமரிப்பதற்கு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும், ஏரிகள் பராமரிப்பு பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்து தருமாறு திட்ட மதிப்பீடு தயார் செய்து அனுப்பி வைக்கிறோம். ஆனால், ஐந்து ஆண்டுகளாக நிதி ஒதுக்கீடு இல்லாததால், ஏரிகளை துார்வாரி சீரமைக்கும் பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது.
- நீர்வளத் துறை அதிகாரி,
திருத்தணி.