விளம்பர பேனர் கட்டும்போது மின்சாரம் பாய்ந்து ஒருவர் பலி
விளம்பர பேனர் கட்டும்போது மின்சாரம் பாய்ந்து ஒருவர் பலி
ADDED : அக் 30, 2026 07:11 PM

திருவள்ளூர்: புட்லுாரில், நண்பரின் குழந்தை பிறந்தநாள் விழாவிற்கு விளம்பர பேனர் கட்டும் போது, மின்சாரம் பாய்ந்து, தீபன்ராஜ், 30, என்பவர் பலியானார்.
திருவள்ளூர் அடுத்த புட்லூர் ராமாபுரம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் அரவிந்தன், 34. இவர், தன் குழந்தையின் முதலாவது பிறந்தநாளை முன்னிட்டு, நேற்று (அக்.,29) இரவு 7:30 மணியளவில், தனது நண்பர் தீபன்ராஜ், 30, என்பவர் உதவியுடன், விளம்பர பேனர் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது, எதிர்பாராதவிதமாக, விளம்பர பேனர் அப்பகுதி வழியே சென்று கொண்டிருந்த மின்சார கம்பியில் உரசியதில், தீபன்ராஜ் மின்சாரம் பாய்ந்து துாக்கி வீசப்பட்டார்.
இதையடுத்து, தீபன்ராஜை மீட்ட அரவிந்தனின் உறவினர்கள், திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றார்.
அப்போது, மருத்துவமனை செல்லும் வழியிலேயே தீபன்ராஜ் உயிரிழந்தார். அதனால், தீபன்ராஜின் உடலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமல், அரவிந்தன் வீட்டிற்கு கொண்டு சென்றார்.
இதுகுறித்து தகவல் அறிந்த திருவள்ளூர் தாலுகா போலீசார், தீபன்ராஜின் உடலை கைப்பற்றி, திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
