/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பேருந்து சேவை நிறுத்தப்பட்டதால் ஒரு லட்சம் பயணியர் கடும் அவதி
/
பேருந்து சேவை நிறுத்தப்பட்டதால் ஒரு லட்சம் பயணியர் கடும் அவதி
பேருந்து சேவை நிறுத்தப்பட்டதால் ஒரு லட்சம் பயணியர் கடும் அவதி
பேருந்து சேவை நிறுத்தப்பட்டதால் ஒரு லட்சம் பயணியர் கடும் அவதி
ADDED : நவ 15, 2025 10:13 PM
திருவாலங்காடு: திருவாலங்காடு வழியாக இயங்கி வந்த 10க்கும் மேற்பட்ட பேருந்துகளின் வழித்தடம் மாற்றப்பட்டது. மேலும், பயணியர் வருகை குறைந்ததால் பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால், திருவாலங்காடு சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பயணியர் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
திருவாலங்காடு ஒன்றியத்தில் 42 ஊராட்சிகள் உள்ளன. திருவாலங்காடில் சர்க்கரை ஆலை, ஐந்து சபைகளின் முதல் சபையான வடாரண்யேஸ்வரர் கோவில், பி.டி.ஓ., அலுவலகம், வட்டார கல்வி, வேளாண் அலுவலகம் உள்ளன.
இப்பகுதியில் இருந்து 16 கி.மீ.,யில், திருவள்ளூர் நகரமும், 16 கி.மீ.,யில் அரக்கோணமும் உள்ளது. திருவாலங்காடில் இருந்து அரசு, தனியார் பேருந்து என, 16 பேருந்துகள், திருவாலங்காடு வழியாக திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், அரக்கோணம், திருத்தணி, திருப்பதி, செங்கல்பட்டு உள்ளிட்ட நகரங்களுக்கு சென்று வந்தன.
கடந்த 10 ஆண்டுகளில், பேருந்து சேவைகள் படிப்படியாக குறைக்கப்பட்டு, தற்போது திருவாலங்காடு வழியாக, திருவள்ளூர் -- அரக்கோணம் வரை ஒரு பேருந்தும், திருவாலங்காடு வழியாக திருவள்ளூர், - பேரம்பாக்கம் வரை ஒரு பேருந்தும் இயக்கப் படுகின்றன.
இதனால், திருவாலங்காடு சுற்றுவட்டார கிராமத்தில் வசிக்கும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள், அருகே உள்ள நகரங்களுக்கு செல்ல முடியாமல் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
நான்கு வழிச்சாலை இருக்கு...பேருந்து சேவை இல்லையே
திருவாலங்காடு வழியாக இயக்கப்பட்டு வந்த அரசு மற்றும் தனியார் பேருந்து சேவை நிறுத்தப்பட்டு உள்ளதால், பள்ளி, கல்லுாரி மாணவ -- மாணவியர், பணிக்கு செல்வோர் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். தற்போது, நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பேருந்து சேவை நிறுத்தப்பட்டது வேதனை அளிக்கிறது. காஞ்சிபுரம் கோட்ட மேலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு மனு அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. - வி.கோவிந்தன், பகுதிவாசி, திருவாலங்காடு.

