/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணி அருகே கோடை வெப்பத்தை தணிக்கும் பனை ஓலை 'விசிறி' கிராமம்
/
திருத்தணி அருகே கோடை வெப்பத்தை தணிக்கும் பனை ஓலை 'விசிறி' கிராமம்
திருத்தணி அருகே கோடை வெப்பத்தை தணிக்கும் பனை ஓலை 'விசிறி' கிராமம்
திருத்தணி அருகே கோடை வெப்பத்தை தணிக்கும் பனை ஓலை 'விசிறி' கிராமம்
ADDED : ஏப் 13, 2025 04:05 AM

திருத்தணி:தமிழகத்தில் கோடை வெயில் கொளுத்துவதால், மக்கள் வெளியே நடமாடவே அச்சப்படுகின்றனர். மேலும், மின் விசிறிகளில் இருந்தும் அனல் காற்று வீசுவதால், பெரும்பாலானோர் பனை ஓலையால் தயாரிக்கப்படும் விசிறிகள் வாங்கி பயன்படுத்துகின்றனர்.
இதனால், பனை ஓலை விசிறிகளை ஒரு கிராமமே தயாரிக்கும் பணியில்ஈடுபட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியம், வி.சி.ஆர்.கண்டிகை கிராமத்தில், 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பனை ஓலை விசிறி தயாரிக்கும் தொழில் செய்து வருகின்றனர்.
விசிறிகள் தயார் செய்வதற்கு தேவையான பனை ஓலைகளை, சித்துார் மாவட்டம், மடம்பள்ளி, தாங்கல் ஆகிய இடங்களில் இருந்து ஆட்டோ வாயிலாக கொண்டு வருகின்றனர்.
மேலும் சிலர், திருத்தணி அருகே உள்ள கே.ஜி.கண்டிகை, தாடூர், செருக்கனுார், கோரமங்கலம் உட்பட பல கிராமங்களுக்கு சென்று, பலை ஓலைகளை சேகரிக்கின்றனர்.
பின், அவற்றை வெட்டி காய வைத்து, வண்ணம்பூசி, காய்ந்ததும் இறுதி வடிவம் கொடுக்கின்றனர். ஜனவரி - அக்டோபர் மாதம் வரை விசிறிகள் தயார் செய்து மொத்தமாகவும், சில்லரையாகவும் விற்கின்றனர்.
இதுகுறித்து வி.சி.ஆர்.கண்டிகையைச் சேர்ந்தவர்கள் கூறியதாவது:
எங்கள் கிராமத்தில் உள்ள 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், பனை ஓலை விசிறி தயாரிக்கும் பணியில் காலம் காலமாக ஈடுபட்டு வருகின்றனர். நவம்பர் மற்றும் டிசம்பர் ஆகிய இரு மாதங்கள் மட்டும் எங்களுக்கு ஓய்வு கிடைக்கிறது.
மற்ற மாதங்களில் விசிறி தயாரிக்கும் தொழில் தான் செய்வோம். மொத்தம் 500 ஓலைகள் சேகரித்த பின், எங்கள் கிராமத்திற்கு கொண்டு வருவோம்.
ஒரு விசிறி தயாரிக்க, 8 - 10 ரூபாய் செலவாகிறது. ஒரு விசிறி, 15 - 20 ரூபாய்க்கு விற்பனை செய்கிறோம். ஒரு குடும்பம், 12 மணி நேரம் தொடர்ந்து இந்த வேலையை செய்தால், ஒரு நாளைக்கு, 80 -- 100 விசிறிகள் தயார் செய்யலாம்.
இத்தொழிலை நாங்கள் இரண்டு தலைமுறைகளாக செய்து வருகிறோம். இத்தொழிலில் எங்களுக்கு போதிய வருமானம் கிடைப்பதால், இதையே குடிசை தொழிலாக செய்கிறோம்.
பனை ஓலை விசிறிகளுக்கு தற்போதும் கிராக்கி இருப்பதால், விசிறிகள் தயாரிக்கும் தொழிலை எங்களால் விட முடியவில்லை.
பனை ஓலை விசிறிகள் சென்னை, காஞ்சி, செங்கல்பட்டு மற்றும் வேலுார் ஆகிய மாவட்டங்களுக்கு வாகனம் மூலம் கொண்டு சென்று விற்பனை செய்கிறோம். மக்கள் விரும்பி வாங்குகின்றனர்.
இதுதவிர, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து, எங்கள் கிராமத்திற்கு வந்து, பனை ஓலை விசிறிகளை மொத்தமாக வாங்கி செல்கின்றனர். அரசு கடனுதவி வழங்குவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்பது நீண்டநாள் கோரிக்கையாக உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.