/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கும்மிடி சுற்றுச்சூழல் அலுவலகத்தை மாணவியரின் பெற்றோர் முற்றுகை
/
கும்மிடி சுற்றுச்சூழல் அலுவலகத்தை மாணவியரின் பெற்றோர் முற்றுகை
கும்மிடி சுற்றுச்சூழல் அலுவலகத்தை மாணவியரின் பெற்றோர் முற்றுகை
கும்மிடி சுற்றுச்சூழல் அலுவலகத்தை மாணவியரின் பெற்றோர் முற்றுகை
ADDED : ஆக 29, 2025 12:41 AM
கும்மிடிப்பூண்டி :கும்மிடிப்பூண்டி அருகே பள்ளி வகுப்பறையில் மூச்சு திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவியரின் பெற்றோர், நேற்று சுற்றுச்சூழல் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.
கும்மிடிப்பூண்டி அருகே சித்தராஜகண்டிகை கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில், 10ம் வகுப்பு படிக்கும் நான்கு மாணவியருக்கு, திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
பள்ளியை சுற்றியுள்ள தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் நச்சு புகையால், மூச்சு திணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட மாணவியரின் பெற்றோர் நேற்று, கும்மிடிப்பூண்டியில் உள்ள மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
இதை தொடர்ந்து, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளரிடம் மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
இதுபோன்ற நிகழ்வு, கடந்த மாதமும் பள்ளி மாணவியருக்கு ஏற்பட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். பள்ளி மாணவர்கள் மற்றும் கிராம மக்களின் ஆரோக்கியம் பாதிக்கும் வகையில், சுற்றியுள்ள தொழிற்சாலைகள் நச்சு புகையை வெளியேற்றி வருகின்றன.
இதனால், சித்தராஜகண்டிகை, பாப்பன்குப்பம், கோபால்ரெட்டிகண்டிகை, போடிரெட்டிகண்டிகை கிராம மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் வழிமுறைகளை முறையாக பின்பற்றாமல் இயங்கி வரும் தொழிற்சாலைகளால், சுற்றுச்சூழல் கடுமையாக பாதித்து, கிராம மக்கள் பலர், உடல் நல பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.
எனவே, மாசு கட்டுப்பாட்டு விதிமீறி செயல்படும் தொழிற்சாலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.