/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
போக்குவரத்து நிர்வாகம் அறிவுறுத்தியும் நிற்காத பேருந்துகளால் பயணியர் அவதி
/
போக்குவரத்து நிர்வாகம் அறிவுறுத்தியும் நிற்காத பேருந்துகளால் பயணியர் அவதி
போக்குவரத்து நிர்வாகம் அறிவுறுத்தியும் நிற்காத பேருந்துகளால் பயணியர் அவதி
போக்குவரத்து நிர்வாகம் அறிவுறுத்தியும் நிற்காத பேருந்துகளால் பயணியர் அவதி
ADDED : அக் 24, 2025 10:34 PM
பொன்னேரி: போக்குவரத்து கழக நிர்வாகங்கள் அறிவுறுத்தியும், மெதுார் கூட்டுறவு சங்க அலுவலகம் அருகே உள்ள நிறுத்தத்தில் அரசு பேருந்துகள் நிற்காமல் செல்வதால், பயணியர் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
பொன்னேரி அடுத்த மெதுார் பகுதியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் அமைந்துள்ளது. நகைக்கடன், சேமிப்பு, மகளிர் குழுவிற்கான கடன், விவசாய கடன், தொழில்கடன் என, பல்வேறு வங்கி சேவைகளை வழங்கி வருகிறது.
இங்கு, 5,000க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் உள்ளனர். மெதுார் பகுதியை சுற்றியுள்ள, 28 கிராமங்களின் முக்கிய வங்கியாக உள்ளது. இது, மெதுார் பஜார் பகுதியில் இருந்து, 1.5 கி.மீ.,யில் அமைந்துள்ளது.
பல்வேறு கிராமங்களில் இருந்து பேருந்துகளில் வரும் விவசாயிகள், மகளிர் குழுவினர், பொதுமக்கள், மெதுார் பஜார் பகுதியில் இறங்கி, அங்கிருந்து நடந்து செல்ல வேண்டும். வங்கி பரிவர்த்தனைகளை முடித்துவிட்டு, மீண்டும் 1.5 கி.மீ., நடந்து சென்று, மெதுாரில் இருந்து பேருந்து மூலம் செல்ல வேண்டும்.
வங்கியில் இருந்து பணம் மற்றும் நகைகளை எடுத்து செல்லும்போது, வழிப்பறி சம்பவங்களை எண்ணி அச்சத்திற்கு ஆளாகின்றனர். பொன்னேரி - பழவேற்காடு மாநில நெடுஞ்சாலையில் இந்த வங்கி அமைந்துள்ளதால், இந்த வழித்தடத்தில் செல்லும் பேருந்துகள், இங்கு நின்று செல்ல வேண்டும் என, கிராம மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
அதன் பயனாக, மாநகர மற்றும் அரசு போக்குவரத்து கழக நிர்வாகங்கள், கூட்டுறவு கடன் சங்க அலுவலக வாயிலில் பேருந்துகள் நின்று செல்ல நடவடிக்கை எடுத்தன. இது தொடர்பாக, அந்த வழித்தடத்தில் செல்லும் பேருந்துகளின் நடத்துனர் மற்றும் ஓட்டுநர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டது.
ஆனால், நிர்வாகத்தின் அறிவுறுத்தலை மதிக்காமல், அரசு பேருந்துகள், கூட்டுறவு கடன் சங்க அலுவலக வாயிலில் நின்று செல்வதில்லை. வங்கிக்கு வரும் பயணியர் கை காட்டினாலும், பேருந்துகள் நிற்காமல் செல்கின்றன.
இதனால், வங்கிக்கு வரும் கிராம மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். பணிமனை அதிகாரிகள், பொன்னேரி - பழவேற்காடு வழித்தடத்தில் செல்லும் பேருந்துகளை, இந்த நிறுத்தத்தில் நின்று செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், இங்கு பயணியர் நிழற்குடை அமைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

