/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சென்னை - பெங்களூரு நெடுஞ்சாலையில்... பாதசாரிகள் படும்பாடு! 12 இடங்களில் நடைமேம்பாலம் அவசியம்
/
சென்னை - பெங்களூரு நெடுஞ்சாலையில்... பாதசாரிகள் படும்பாடு! 12 இடங்களில் நடைமேம்பாலம் அவசியம்
சென்னை - பெங்களூரு நெடுஞ்சாலையில்... பாதசாரிகள் படும்பாடு! 12 இடங்களில் நடைமேம்பாலம் அவசியம்
சென்னை - பெங்களூரு நெடுஞ்சாலையில்... பாதசாரிகள் படும்பாடு! 12 இடங்களில் நடைமேம்பாலம் அவசியம்
ADDED : அக் 06, 2025 10:23 PM

திருவள்ளூர் : சென்னை - பெங்களூரு தேசிய அதிவிரைவு நெடுஞ்சாலையில், 'விர்' என வேகமாக வரும் வாகனங்களுக்கு மத்தியில், சாலையை கடப்பதற்குள் பாதசாரிகள் படும்பாடு, பெரும்பாடாக உள்ளது. கடந்த ஓராண்டில் மட்டும் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். எனவே, விபத்து, உயிரிழப்பு அசம்பாவிதங்களை தடுக்க, 12 இடங்களில் நடைமேம்பாலம் அமைக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.
சென்னை - பெங்களூரு தேசிய அதிவிரைவு நெடுஞ்சாலையில், தினமும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த நான்கு வழிச்சாலையை, 654 கோடி ரூபாயில் ஆறு வழிச்சாலையாக அகலப்படுத்த திட்டமிடப்பட்டு, மூன்று பிரிவுகளாக பணிகள் நடந்து வருகின்றன.
அதன்படி, மதுரவாயல்- -- ஸ்ரீபெரும்புதுார் வரை, 2022ம் ஆண்டு, 23 கி.மீ.,க்கு விரிவாக்க பணி துவக்கப்பட்டது. அதேபோல், கடந்த 2019ம் ஆண்டு, ஸ்ரீபெரும்புதுார் -- காரப்பேட்டை வரை 34 கி.மீ., காரப்பேட்டை -- வாலாஜாபேட்டை வரை 36 கி.மீ.,க்கு விரிவாக்க பணி நடந்து வருகிறது.
கடந்த 2024ல் முழுமை பெற வேண்டிய இப்பணிகள், தற்போது வரை நடந்து வருகிறது. இந்த நெடுஞ்சாலையில், பூந்தமல்லி - ஸ்ரீபெரும்புதுார் வரை திருமழிசை, செம்பரம்பாக்கம், பாப்பன்சத்திரம், தண்டலம், இருங்காட்டுகோட்டை என, 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
மேலும், 20க்கும் மேற்பட்ட கல்லுாரிகள், தொழிற்சாலைகள், தனியார் மருத்துவமனை, மின்வாரிய அலுவலகம், சிப்காட் உட்பட பல்வேறு அரசு அலுவலகங்கள் உள்ளன.
இக்கிராமங்களைச் சேர்ந்த மக்கள், பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர் மற்றும் முதியோர், நெடுஞ்சாலையை கடந்து செல்லும் போது விபத்தில் சிக்கி வருகின்றனர். கடந்த ஓராண்டில் மட்டும், 30க்கும் மேற்பட்டோர் விபத்தில் உயிரிழந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதை தடுக்கும் வகையில், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வண்டலுார், தைலாவரம், காட்டாங்கொளத்துார், மறைமலைநகர், சிங்கபெருமாள்கோவில் ஆகிய இங்களில் நடைமேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
அதேபோல், சென்னை - பெங்களூரு தேசிய அதிவிரைவு நெடுஞ்சாலையை கடந்து செல்லும் வகையில், நடைமேம்பாலம் அமைக்க வேண்டுமென, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எதிர்பார்ப்பு சென்னை - பெங்களூரு தேசிய அதிவிரைவு நெடுஞ்சாலையில் நசரத்பேட்டை, வரதராஜபுரம், திருவள்ளூர் சாலை சந்திப்பு, செம்பரம்பாக்கம், திருமழிசை சிப்காட், குத்தம்பாக்கம் பேருந்து நிலையம், படூர் சாலை சந்திப்பு.
பாப்பன்சத்திரம், செட்டிபேடு, தண்டலம் ஊராட்சி, சவீதா மருத்துவக்கல்லுாரி, இருங்காட்டுகோட்டை ஆகிய 12 இடங்களில், அதிகளவிலான மக்கள் சாலையை கடந்து வருகின்றனர்.
எனவே, இப்பகுதியில் நடைமேம்பாலம் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அப்பகுதி மக்களின் எதிர்பார்க்கின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணைய அதிகாரிகள், சென்னை - பெங்களூரு தேசிய அதிவிரைவு நெடுஞ்சாலையில் ஆய்வு செய்து, நடைமேம்பாலம் அமைக்க வேண்டுமென, 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நடவடிக்கை எடுக்கப்படும் சென்னை - பெங்களூரு தேசிய அதிவிரைவு நெடுஞ்சாலையை, மக்கள் அதிகளவில் பயன்படுத்தும் பகுதி குறித்து ஆய்வு செய்யப்படும். பின், சம்பந்தப்பட்ட மாநில நெடுஞ்சாலைத் துறையினரே நடைமேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கலாம். மேலும், தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்து, நடைமேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரி, திருவள்ளூர்.
அச்சத்துடன் சாலையை கடந்து வருகிறோம் சென்னை - பெங்களூரு தேசிய அதிவிரைவு நெடுஞ்சாலையை கடந்து செல்ல நடைமேம்பாலம் இல்லாததால், அச்சத்துடன் கடக்க வேண்டியுள்ளது. போக்குவரத்து சிக்னல் அமைக்கப்பட்டிருந்தாலும், வாகன ஓட்டிகள் அதை கண்டுகொள்வதே கிடையாது. நடைமேம்பாலம் அமைத்தால், பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர் மற்றும் கிராம மக்கள் பயமின்றி கடந்து செல்ல முடியும். - எம்.மாரியப்பன், திருமழிசை.