/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணி - கோவைக்கு பஸ் இயக்க கோரி மனு
/
திருத்தணி - கோவைக்கு பஸ் இயக்க கோரி மனு
ADDED : நவ 29, 2025 03:39 AM
திருத்தணி: 'திருத்தணியில் இருந்து பழனி, பொள்ளாச்சி வழியாக கோவைக்கு படுக்கை வசதியுடன் கூடிய அரசு பேருந்தை இயக்க வேண்டும்' என, திருத்தணி தொகுதி மக்கள், தி.மு.க., - எம்.எல்.ஏ., சந்திரனிடம் மனு அளித்தனர்.
திருத்தணி சட்டசபை தொகுதி மக்கள், திருத்தணி முருகப் பெருமானை தரிசிப்பது போல், பழனி மற்றும் திருச்செந்துார் முருகன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்வதற்கு வசதியாக, பேருந்து வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என, தமிழக அரசிடமும், தி.மு.க., - எம்.எல்.ஏ., சந்திரனிடமும், அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையடுத்து, எம்.எல்.ஏ., சந்திரன், முதல்வர் ஸ்டாலின், போக்குவரத்துறை அமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று, நான்கு மாதங்களுக்கு முன், திருத்தணி பேருந்து நிலையத்தில் இருந்து, காஞ்சிபுரம் வழியாக திருச்செந்துாருக்கு அரசு பேருந்து சேவையை துவக்கி வைத்தார்.
நேற்று மீண்டும் எம்.எல்.ஏ., சந்திரனிடம், திருத்தணியில் இருந்து சோளிங்கர், ஆற்காடு, ஆரணி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருச்சி, திண்டுக்கல், பழனி மற்றும் பொள்ளாச்சி வழியாக கோவை வரை, படுக்கை வசதியுடன் கூடிய அரசு பேருந்தை இயக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் மனு அளித்தனர்.
மனுவை பெற்ற எம்.எல்.ஏ., சந்திரன், 'போக்குவரத்து துறை அமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும்' என, உறுதியளித்தார்.

