/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கடல்நீரை குடிநீராக்கும் ஆலையில் புது இயந்திரங்களுடன் விரைவில் உற்பத்தி
/
கடல்நீரை குடிநீராக்கும் ஆலையில் புது இயந்திரங்களுடன் விரைவில் உற்பத்தி
கடல்நீரை குடிநீராக்கும் ஆலையில் புது இயந்திரங்களுடன் விரைவில் உற்பத்தி
கடல்நீரை குடிநீராக்கும் ஆலையில் புது இயந்திரங்களுடன் விரைவில் உற்பத்தி
ADDED : செப் 27, 2025 11:07 PM
மீஞ்சூர்:மீஞ்சூர் அடுத்த காட்டுப்பள்ளியில், தினமும் 10 கோடி லிட்டர் திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் ஆலை முடங்கிய நிலையில், புதிய இயந்திரங்கள் பொருத்தி செயல்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளதால், மீஞ்சூருக்கும் கூடுதல் தண்ணீர் கிடைக்க வாய்ப்புள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்த காட்டுப்பள்ளியில், 2010ல், 600 கோடி ரூபாயில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்தது.
சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக, திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்த காட்டுப்பள்ளியில், 600 கோடி ரூபாயில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், கடந்த 2010ல் செயல்படுத்தப்பட்டது.
இங்கு, தனியார் ஒப்பந்த நிறுவனம் வாயிலாக, தினமும் 20.37 கோடி லிட்டர் கடல்நீரை சுத்திகரித்து, 10 கோடி லிட்டர் குடிநீராக மாற்றப்பட்டு, வடசென்னை பகுதிகளான மணலி, கத்திவாக்கம், எண்ணுார், மாதவரம், திருவொற்றியூர், வியாசர்பாடி உள்ளிட்ட பகுதிகளுக்கு வினியோகிக்கப்பட்டு வந்தது.
கடந்த 2019 வரை, மேற்கண்ட ஒப்பந்த நிறுவனம், திட்டமிடப்பட்ட அளவிற்கு கடல் நீரை சுத்திகரித்து, குடிநீராக்கி சென்னை குடிநீர் வாரியத்திற்கு வழங்கி வந்தது.
அதன்பின், ஆலை பராமரிப்பு இல்லாமல், தொழில்நுட்ப கோளாறுகள், இயந்திரங்கள், மைக்ரோ பில்டர்கள் பழுது, உதிரிபாகங்கள் செயலிழப்பு ஆகியவற்றால், உற்பத்தி படிப்படியாக குறைந்து, 2024 இறுதியில் முற்றிலும் முடங்கியது.
கடந்த ஜூலை 18ம் தேதி, தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு, மேற்கண்ட ஆலையில் அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார். ''விரைவில் குடிநீர் ஆலையை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, தெரிவித்திருந்தார்.
அங்கு, மூன்று மாதங்களாக எவ்வித பணிகளும் நடைபெறாமல் உள்ளன. தற்போது, “ஆலையை புதுப்பிக்க புதிய இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டு, சோதனை ஓட்டம் நடத்தப்படும்,” என, அமைச்சர் நேரு தெரிவித்துள்ளார்.
சமீபத்தில், மீஞ்சூரில் நடைபெற்ற முன்னாள் அமைச்சர் படத்திறப்பு விழா நிகழ்ச்சியில் அமைச்சர் நேரு பங்கேற்றார்.
அப்போது, அமைச்சர் நேரு கூறுகையில், “பழுதான பழைய இயந்திரங்களுக்கு பதிலாக, புதிய இயந்திரங்கள் கொண்டு வரப்பட உள்ளன. அவற்றை பொருத்தி சோதனை ஒட்டம் மேற்கொள்ளப்படும். அதை தொடர்ந்து, உற்பத்தி துவங்கப்படும்,” என, தெரிவித்தார்.
இதன் மூலம், ஒன்பது மாதங்களாக முடங்கி கிடக்கும் கடல்நீரை குடிநீராக்கும் ஆலைக்கு, விரைவில் விமோசனம் கிடைக்க உள்ளது. மேலும், சட்டசபையில் அறிவித்தபடி, மீஞ்சூர் பகுதிக்கும், 40 லட்சம் லிட்டர் குடிநீர் கிடைக்க வாய்ப்புள்ளது.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
மீஞ்சூர் பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. கடல்நீரை குடிநீராக்கும் ஆலையில் இருந்து தண்ணீர் எதிர்பார்த்த நிலையில், அது முடங்கியது. அதை சீரமைக்கும் பணிகளில், ஒன்பது மாதங்களுக்கு பின், தற்போது தான் அரசு முனைப்பு காட்டுகிறது.
இதுவும் அறிவிப்புடன் நின்றுவிடாமல், செயல்படுத்த தீவிரம் காட்ட வேண்டும். புதிய இயந்திரங்களை விரைவாக பொருத்தி, உற்பத்தியை துவக்க வேண்டும். மீஞ்சூருக்கும் அதன் வாயிலாக வினியோகித்து, குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.