/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மானிய விலையில் விவசாயிகளுக்கு புல் வெட்டும் இயந்திரம் வழங்கல்
/
மானிய விலையில் விவசாயிகளுக்கு புல் வெட்டும் இயந்திரம் வழங்கல்
மானிய விலையில் விவசாயிகளுக்கு புல் வெட்டும் இயந்திரம் வழங்கல்
மானிய விலையில் விவசாயிகளுக்கு புல் வெட்டும் இயந்திரம் வழங்கல்
ADDED : ஆக 20, 2025 02:18 AM

திருத்தணி:மானிய விலையில், விவசாயிகளுக்கு கால்நடை துறையின் மூலம் புல் வெட்டும் இயந்திரங்கள் வழங்கப்படுகின்றன.
திருத்தணி கோட்டத்தில் திருத்தணி, பள்ளிப்பட்டு, திருவாலங்காடு, ஆர்.கே.பேட்டை ஆகிய நான்கு ஒன்றியங்களில், 84,500 கால்நடைகளை விவசாயிகள் வளர்த்து வருகின்றனர்.
இந்த கால்நடைகளுக்கு கால்நடை துறையின் மூலம், 23 கால்நடை மருந்தகம், ஆறு கிளை நிலையங்கள் ஏற்படுத்தி சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுதவிர, கால்நடை தீவன விதைகள் வழங்கி, தீவனம் பயிரிடவும் ஊக்குவிக்கிறது.
தீவன பயிரான புல் வளர்ந்தவுடன், விவசாயிகள் தண்டுகளை கத்தியால் துண்டு, துண்டாக வெட்டி கால்நடைகளுக்கு உணவாக வழங்குகின்றனர். கால்நடை பராமரிப்பு துறையின் தீவன அபிவிருத்தி திட்டம் 2024-25ம் ஆண்டின் கீழ், மானிய விலையில் புல் வெட்டும் இயந்திரங்களை வழங்கி வருகிறது.
முதற்கட்டமாக, திருத்தணி வருவாய் கோட்டத்தில், 25 விவசாயிகளுக்கு புல் வெட்டும் கருவிகள் வழங்குவதற்கு, திருத்தணி கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் தயார் நிலையில் உள்ளன.
இது குறித்து கால்நடை துறை உதவி இயக்குநர் கிரிதரன் கூறியதாவது:
திருத்தணி கோட்டத்தில் கால்நடைகள் வளர்க்கும் விவசாயிகளுக்கு, 50 சதவீதம் மானியத்தில் புல் வெட்டும் இயந்திரங்கள் வழங்கப்படவுள்ளன. இந்த இயந்திரத்தின் மொத்த விலை, 29,008 ரூபாய்.
இதற்கு, கால்நடை துறையின் மூலம் அரசு மானியமாக, 50 சதவீதம் வழங்கப்படுகிறது. மீதமுள்ள 14,504 ரூபாயை, இயந்திரம் வழங்கும் தனியார் கம்பெனியின் முகவரிக்கு வரைகாசோலையாக வழங்க வேண்டும்.
தற்போது, 25 புல் வெட்டும் இயந்திரங்களில், 20 விவசாயிகள் வாங்குவதற்கு வரைவோலை வழங்கியுள்ளனர். இருப்பு உள்ள வரையில், விண்ணப்பித்த விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.