sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 25, 2025 ,ஐப்பசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

புதுச்சத்திரம் கூவம் ஆற்று தரைப்பாலம் வெள்ளத்தில்...மூழ்கியது:  50 கிராம மக்கள் 20 கி.மீ., துாரம் சுற்றி செல்லும் அவலம்

/

புதுச்சத்திரம் கூவம் ஆற்று தரைப்பாலம் வெள்ளத்தில்...மூழ்கியது:  50 கிராம மக்கள் 20 கி.மீ., துாரம் சுற்றி செல்லும் அவலம்

புதுச்சத்திரம் கூவம் ஆற்று தரைப்பாலம் வெள்ளத்தில்...மூழ்கியது:  50 கிராம மக்கள் 20 கி.மீ., துாரம் சுற்றி செல்லும் அவலம்

புதுச்சத்திரம் கூவம் ஆற்று தரைப்பாலம் வெள்ளத்தில்...மூழ்கியது:  50 கிராம மக்கள் 20 கி.மீ., துாரம் சுற்றி செல்லும் அவலம்


ADDED : அக் 24, 2025 12:15 AM

Google News

ADDED : அக் 24, 2025 12:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருமழிசை: புதுச்சத்திரம் பகுதியில் கூவம் ஆற்று தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியதால் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. இதனால், பூந்தமல்லி ஒன்றியத்துக்குட்பட்ட, 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் 20 கி.மீ., துாரம் சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. திருமழிசை - திருவள்ளூர் நெடுஞ்சாலையில் வெள்ளவேடு அடுத்துள்ளது புதுச்சத்திரம். இங்கிருந்து, கூவம் ஆற்றைக் கடந்து, திருநின்றவூர் வழியாக, ஆவடி மற்றும் பெரியபாளையம் செல்லும் நெடுஞ்சாலையை இணக்கும் வகையில், 1950ல் தரைப்பாலம் கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தது.

புதுச்சத்திரத்தில் இருந்து, வேப்பம்பட்டு, திருநின்றவூர், செவ்வாப்பேட்டை, தாமரைப்பாக்கம் கூட்டுசாலை, புதுவாயல் கூட்டுசாலை வழியாக கும்மிடிப்பூண்டி தேசிய நெடுஞ்சாலைக்கு, தினமும் 50,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.

கடந்த 75 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட இந்த தரைப்பாலத்தில் வடகிழக்கு பருவமழையின் போது, வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்படும்.

இந்நிலையில், 2015ம் ஆண்டு, டிசம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் இந்த தரைப்பாலம் சேதமடைந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

இதையடுத்து, 13 ராட்சத குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டு, 90 லட்சம் ரூபாய் மதிப்பில் தரைப்பாலம் சீரமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தது.

இந்த பாலம் மிகவும் குறுகலாக உள்ளதால் போக்குவரத்தில் அடிக்கடி நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருவதோடு மிகுந்த அச்சத்துடன் சென்று வருவர்.

இந்நிலையில், சில தினங்களாக பெய்து வரும் மழையில், கூவம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் நேற்று முன்தினம் இரவு புதுச்சத்திரம் தரைப்பாலத்தில் வெள்ளநீர் வழிந்தோடியது.

இதையடுத்து பகுதி மக்கள் ஆபத்தான முறையில் தரைப்பாலத்தை கடந்து சென்று கொண்டிருந்தனர்.

தகவலறிந்த பூந்தமல்லி போக்குவரத்து போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்புகள் அமைத்து போக்குவரத்தை துண்டித்தனர். நேற்று காலை முதல் அங்கு மக்கள் மற்றும் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.

இதனால் பூந்தமல்லி ஒன்றியத்துக்குட்பட்ட செவ்வாப்பேட்டை, வேப்பம்பட்டு, பெருமாள்பட்டு, திருநின்றவூர் உட்பட 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள், பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவ - மாணவியர் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டு வந்தனர்.

குறிப்பாக அவசர மருத்துவ தேவைக்கு ஆம்புலன்ஸ் கூட வரமுடியாததால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

எனவே, மாவட்ட நிர்வாகம் புதுச்சத்திரம் - திருநின்றவூர் இடையே புதிய உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டுமென 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மற்றும் வாகன ஒட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து, நெடுஞ்சாலைத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

கடந்த மூன்றாண்டுகளுக்கு முன், 45 கோடி ரூபாயில் மூன்று வழி மேம்பாலம் அமைக்க அளித்த திட்ட மதிப்பீட்டின்படி புதிய மேம்பாலம் கட்ட, தற்போது, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து நில எடுப்பு பணிகள் துவங்கியுள்ளது. இந்நிலையில் வரும் காலங்களில் வாகன போக்குவரத்தை கருத்தில் கொண்டு நான்கு வழிச்சாலை மேம்பாலமாக வடிவமைக்க திட்டமிட்டு அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளோம்.

இதையடுத்து இப்பகுதியில் பாலத்தில் இருபுறம் நடைபாதை, மீடியனுடன் 20.5 மீட்டர் அகலத்திலும், 198 மீட்டர் நீளத்திலும், 60 கோடி ரூபாயில் புதிய மேம்பாலம் கட்டுவதற்கு திட்டமிட்டு அரசுக்கு அனுப்பி உள்ளோம். அரசிடமிருந்து உத்தரவு வந்தவுடன், பணிகள் துவங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கிருஷ்ணா நீர் வினாடிக்கு

538 கன அடி வரத்து



கிருஷ்ணா நீர் வினாடிக்கு, 538 கன அடி வீதம் வந்து கொண்டு இருக்கிறது. சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக, 1983ம் ஆண்டு தெலுங்கு கங்கை ஒப்பந்தம் போடப்பட்டது. ஆண்டுதோறும் ஜூலை - அக்., மாதங் களில், 8 டி.எம்.சி ., ஜனவரி - ஏப்., மாதங்களில், 4 டி.எம்.சி., என மொத்தம், 12 டி.எம்.சி., கிருஷ்ணா நீர் தரவேண்டும். இதற்காக, ஆந்திராவின் கண்டலேறு அணையில் இருந்து தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோபாயின்ட் வழியே, பூண்டி நீர்த்தேக்கம் வரை 177 கி.மீட்டர் துாரத்திற்கு கால்வாய் வெட்டப்பட்டது. கடந்த மார்ச் 28ம் தேதி முதல் தமிழகத்திற்கு கிருஷ்ணா நீர் வந்து கொண்டு இருக்கிறது. கண்டலேறு அணையில் இருந்து வினாடிக்கு, 2,000 கன அடி நீர் திறந்து விடப்பட்டு உள்ளது. ஆந்திராவின் விவசாய தேவைக்கு போக தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோபாயின்ட்டிற்கு வினாடிக்கு, 538 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கிறது.

பூண்டி நீர்த்தேக்கத்தில் உபரி நீர் திறப்பு


பூண்டி நீர்த்தேக்கத்தில் உபரி நீர் திறக்கப்படுவதை காண, பொதுமக்கள் ஆர்வமாக குவிந்து வருகின்றனர். திருவள்ளூர் அடுத்த பூண்டியில் சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்திற்கு, கன மழை காரணமாக கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து வந்து கொண்டிருக்கிறது. ஆந்திர மாநிலம் கிருஷ்ணாபுரம் அணையும் திறக்கப்பட்டதால், அங்கிருந்தும், கொசஸ்தலை ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து வந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக, நீர்த்தேக்கத்தின் மொத்த கொள்ளளவான, 3.23 டி.எம்.சி.,யில், 2.40 டி.எம்.சி., தண்ணீர் நிரம்பி உள்ளது.
நீர்த்தேக்கத்திற்கு வினாடிக்கு, 4,120 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. நீர்த்தேக்கத்தின் மொத்த உயரமான, 35 அடியில் தற்போது, 33 அடி வரை தண்ணீர் நிரம்பி உள்ளது. இதையடுத்து, கடந்த சில நாட்களாக பூண்டி நீர்த்தேக்கத்தின் மதகு வழியாக உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது. நேற்று நீர்த்தேக்கத்தில் இருந்து, நான்கு மதகு வழியாக, 4,887 கன அடி நீர் திறக்கப்பட்டு, கொசஸ்தலை ஆற்றில் சீறி பாய்ந்து தாமரைப்பாக்கம் அணைக்கட்டு நோக்கி செல்கிறது. அங்கிருந்து, எண்ணுார் முகத்துவாரம் வழியாக, கடலுக்குள் சென்று கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதை காண, திருவள்ளூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்தோர், ஆர்வமாக வந்து, பார்வையிட்டு வருகின்றனர். அவர்களின் வாகனங்களை, நீர்த்தேக்கத்தின் மதகு கரையில் நிறுத்தி, உபரி நீர் ஆற்றில் செல்வதை ஆர்வமாக பார்வையிடுகின்றனர்.








      Dinamalar
      Follow us