/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஒரு வழி சாலையாக மாற்ற ரயில் பயணியர் கோரிக்கை
/
ஒரு வழி சாலையாக மாற்ற ரயில் பயணியர் கோரிக்கை
ADDED : பிப் 15, 2024 02:25 AM
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி பஜார் பகுதியில் இருந்து ரயில் நிலையம் செல்வதற்கு இரு சாலைகள் உள்ளன. ஒன்று ரயில் நிலைய சாலை என்றும் அழைக்கப்படும் காட்டுக்கொல்லை தெரு, மற்றொன்று வசந்த பஜார் சாலை. இரு சாலைகளும் குறுகலாக உள்ளன.
இதில், ரயில் நிலைய சாலையில், 200க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள், அந்த சாலையை மேலும் குறுகலாக்கும் விதமாக இருசக்கர வாகனங்களை நிறுத்துகின்றனர்.
இதனால், அந்த சாலையில் பல நேரங்கள் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எதிரெதிரே வாகனங்கள் வரும் போது, போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்து, ரயில் பயணியர் சிரமத்தை சந்திக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
அந்த சாலையை தவிர்த்து, வசந்த பஜார் சாலை வழியாக செல்லும் போதும், அங்கும் எதிரெதிரே வாகனங்கள் வருகையில், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த சிக்கலுக்கு தீர்வு காண, இரு சாலைகளையும் ஒரு வழி சாலையாக மாற்ற வேண்டும் என, ரயில் பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ரயில் நிலையம் செல்ல வசந்த பஜார் சாலை, ரயில் நிலையத்தில் இருந்து பஜார் பகுதிக்கு செல்ல ரயில் நிலைய சாலை என, வாகனங்களை பிரித்து அனுப்ப வேண்டும்.
எனவே, கும்மிடிப்பூண்டி பேரூராட்சி நிர்வாகமும், போலீசாரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

