/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பூண்டி வனப்பகுதி காட்டாறுகளில் ஓடும் மழைநீர்... வீணாகிறது:தடுப்பணைகளை ஆழப்படுத்தி சேமிக்க வலியுறுத்தல்
/
பூண்டி வனப்பகுதி காட்டாறுகளில் ஓடும் மழைநீர்... வீணாகிறது:தடுப்பணைகளை ஆழப்படுத்தி சேமிக்க வலியுறுத்தல்
பூண்டி வனப்பகுதி காட்டாறுகளில் ஓடும் மழைநீர்... வீணாகிறது:தடுப்பணைகளை ஆழப்படுத்தி சேமிக்க வலியுறுத்தல்
பூண்டி வனப்பகுதி காட்டாறுகளில் ஓடும் மழைநீர்... வீணாகிறது:தடுப்பணைகளை ஆழப்படுத்தி சேமிக்க வலியுறுத்தல்
ADDED : நவ 02, 2025 01:48 AM

திருவள்ளூர்: பூண்டி வனப்பகுதியில் உள்ள காட்டாறுகளின் குறுக்கே, சமீபத்தில் பெய்த கனமழையால், வனத்துறையால் கட்டுப்பாட்டில் உள்ள ஏராளமான தடுப்பணைகள் நிரம்பி வழிகின்றன. தடுப்பணைகளை ஆழப்படுத்தினால், மழை காலத்தில் வழிந்தோடும் தண்ணீரை சேமிக்க முடியும். மேலும் சேதமடைந்த மூன்று தடுப்பணைகளை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூண்டி, ஆந்திர - தமிழக எல்லையில் மலை பாங்கான பகுதியில் அமைந்து உள்ளது. வனத்துறை பராமரிப்பில், காப்புக் காடாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இங்கு, மான், நரி, ஓநாய், குரங்கு போன்ற வன விலங்குகள் அதிகம் உள்ளன.
வன விலங்குகள் குடிநீர் அருந்துவதற்காக, வனத்துறை சார்பில், மலைகளில் பெய்யும் மழைநீர் நீர் வடிந்தோடும் ஓடைகளின் குறுக்கே, தடுப்பணைகள் கட்டப்பட்டு உள்ளன.
பூண்டி ஒன்றியம், பிளேஸ்பாளையம், அல்லிகுழி, திம்மபூபாலபுரம், பப்பிரெட்டிகண்டிகை, கூனிப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில், ஏராளமான தடுப்பணைகள் கட்டப்பட்டு உள்ளன.
இந்த தடுப்பணைகள் அனைத்தும் மழை காலத்தில் நிரம்பி வழியும் . கோடை காலத்தில் நீரின்றி வறண்டு விடும். இந்த தடுப்பணை அனைத்தும், உயரம் குறைவாக கட்டப்பட்டு உள்ளதே இதற்கு காரணம்.
இதனால், கன மழை பெய்தாலும், சிறிய அளவிலேயே தண்ணீர் தேங்கி, உபரி நீர் வழிந்தோடி வீணாகிறது.
தற்போது பெய்து வரும் வடகிழக்கு பருவமழையால் , பூண்டி காப்புக்காடி ல் கட்டப்பட்டுள்ள தடுப்பணைகள் நிரம்பி, உபரி நீர் வெளியேறி வருகின்றன. இதனால், தண்ணீர் விரைவில் வெளியேறி, கோடையில் தண்ணீரின்றி வறண்டு விடும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, உயரம் குறைவாக உள்ள இந்த தடுப்பணைகளை ஆழப்படுத்தி, ஓடைகளையும் அகலப்படுத்தினால், மழைக் காலங்களில் கிடைக்கும் தண்ணீரை கூடுதலாக சேகரிக்க முடியும்.
இதனால், தடுப்பணைகளுக்கு அருகில் அமைந்துள்ள கிராமங்களின் ஏரி, குளங்கள் நிரம்பும். விவசாயம் மற்றும் குடிநீர் தேவைக்கும் பற்றாக்குறை ஏற்படாது.
பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட, பிளேஸ்பாளையம் - கூனிப்பளையம் - சீத்தஞ்சேரி சாலை, பூண்டி மலையை ஒட்டி அமைந்து உள்ளது. இங்குள்ள, 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது.
இந்நிலையில், இப்பகுதிகளில் கட்டப்பட்ட தடுப்பணைகளால், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
இதையடுத்து, இச்சாலை யின் ஓரமாக, 10க்கும் மேற்பட்ட ஊராட்சிகளுக்கு, குடிநீர் வினியோகம் செய்ய, ஆழ்துளை குழாய் அமைக்கப்பட்டு உள்ளது. தடுப்பணைகளை ஆழப்படுத்தி, கூடுதல் தண்ணீரை சேமிக்கும் பட்சத்தில் ஆண்டு முழுதும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது.
சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
பூண்டி மலை பகுதி ஆந்திர மாநிலம் கனகம்மாசத்திரத்தில் துவங்கி, சீத்தஞ்சேரி, கூனிப்பாளையம், வழியாக நாகலாபுரம் வரை பரந்து, விரிந்து உள்ளது.
மரங்களும் அடர்த்தியாக வளர்ந்து உள்ளன. இவற்றை தவிர, ஆங்காங்கே சிறு, சிறு குன்றுகளும் உள்ளன. மழைக் காலத்தில் பெய்யும் கனமழையால், மலைகளில் உள்ள ஓடைகளில் வெள்ளப்பெருக்கெடுத்து ஓடும். வழியில், தாழ்வான பகுதிகள், பள்ளங்களில் தேங்கி, வீணாகிறது.
இந்த ஓடைகளை முறைப்படுத்தி, துார் வாரி, அகலப்படுத்தி, தடுப்பணைகளை கட்டி சேகரிக்கலாம். வனத்துறையும், நீர்வளம் மற்றும் மாவட்ட நிர்வாகமும் இணைந்து, பூண்டி வனப்பகுதிகளை ஆய்வு செய்து, தடுப்பணைகளை ஆழப்படுத்தி, கரைகளை உயர்த்தி வீணாகும் தண்ணீரை சேமிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

