/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நாலுார் கம்மார்பாளையத்தில் மழைநீரில் நாற்று நட்டு போராட்டம்
/
நாலுார் கம்மார்பாளையத்தில் மழைநீரில் நாற்று நட்டு போராட்டம்
நாலுார் கம்மார்பாளையத்தில் மழைநீரில் நாற்று நட்டு போராட்டம்
நாலுார் கம்மார்பாளையத்தில் மழைநீரில் நாற்று நட்டு போராட்டம்
ADDED : அக் 22, 2024 07:30 AM

பொன்னேரி : பொன்னேரி - மீஞ்சூர் நெடுஞ்சாலையில் உள்ள நாலுார் ஏரிக்கரையில் இருந்து, நாலுார் கம்மார்பாளையம் கிராமத்திற்கு செல்லும் சாலை உள்ளது.
இந்த சாலை போக்குவரத்திற்கு லாயகற்ற நிலையில் சேதம் அடைந்து கிடக்கிறது. ஏரியின் உபரிநீர் வெளியேறும் கலங்கல் பகுதி அருகே இந்த சாலை இருப்பதால் அங்கு மழைநீர் குளம்போல் தேங்கிவிடுகிறது.
ஏரி நிரம்பும்போது, இரண்டு அடி உயரத்திற்கு உபரிநீர் சாலையை கடந்து, கால்வாய்களில் பயணிக்கிறது.
இதனால் அச்சமயங்களில் சாலையில் போக்குவரத்து பாதிக்கிறது. கிராமவாசிகள் அவரச பணிகளுக்கு செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர்.
ஒரு மாத காலத்திற்கு சாலையில் தண்ணீர் இருப்பதால், வாகன ஓட்டிகள் தடுமாற்றத்துடன் செல்ல வேண்டி உள்ளது. கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழையால் சாலையில் ஆங்காங்கே மழைநீர் தேங்கி கிராமவாசிகள் பெரும் இன்னலுக்கு ஆளாகி உள்ளனர்.
இந்நிலையில், நேற்று கிராமவாசிகள், சாலைகளில் தேங்கியிருந்த மழைநீரில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிராமவாசிகள் கூறியதாவது:
இங்குள்ள தனியார் கன்டெய்னர் நிறுவனங்களுக்கு கனரக வாகனங்கள் வந்து செல்வதால் சாலை மோசமாக மாறி உள்ளது. குண்டும் குழியுமாக உள்ள இதில் தினமும் சிரமத்துடன் பயணிக்கிறோம். பள்ளங்களில் இறங்கி ஏறும் கன்டெய்னர் லாரிகள், கவிழ்ந்து விபத்துக்கள் நேரிடும் அபாயமும் உள்ளது. ஊராட்சி மற்றும் ஒன்றிய நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் தீர்வு இல்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சு நடத்தி, சம்மந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். அதையடுத்து கிராமவாசிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.