/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
இளைஞர் அடித்து கொலை உறவினர்கள் சாலை மறியல்
/
இளைஞர் அடித்து கொலை உறவினர்கள் சாலை மறியல்
ADDED : ஜூலை 12, 2025 11:53 PM

திருவள்ளூர்:மது அருந்தியதை தட்டிக் கேட்ட வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்டார். குற்றவாளிகளை கைது செய்யக் கோரி, டி.எஸ்.பி., அலுவலகம் எதிரே உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் அடுத்த ஈக்காடுகண்டிகையைச் சேர்ந்தவர் கார்த்திகேயன், 38. இவர், சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவருக்கு சந்தியா என்ற மனைவியும், இரு மகன்களும் உள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு, வழக்கம்போல் வேலை முடிந்து ஈக்காடுகண்டிகை பகுதியில் உள்ள வீட்டிற்கு கார்த்திகேயன் வந்தபோது, வீட்டின் அருகே சிலர் மது அருந்தி கொண்டிருந்ததை உறவினர்கள் தட்டிக் கேட்டுள்ளனர்.
இதனால், போதை இளைஞர்களுக்கும், உறவினர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதை, கார்த்திகேயன் மொபைல்போனில் வீடியோ எடுத்தார். ஆத்திரமடைந்த இளைஞர்கள், கார்த்திகேயனை சரமாரியாக தாக்கியதில், படுகாயமடைந்து மயக்கம் அடைந்தார்.
கார்த்திகேயனை மீட்ட உறவினர்கள், திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
இதனால் ஆத்திரமடைந்த 50க்கும் மேற்பட்ட உறவினர்கள், நேற்று திருவள்ளூர் டி.எஸ்.பி., அலுவலகத்தை முற்றுகையிட்டு, பின் திருவள்ளூர் - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து புல்லரம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து, அதே பகுதியைச் சேர்ந்த ஐந்து பேரை பிடித்து விசாரிக்கின்றனர்.