/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பேருந்து நிலையத்தில் தனியார் வாகனங்கள் அகற்றம்
/
பேருந்து நிலையத்தில் தனியார் வாகனங்கள் அகற்றம்
ADDED : அக் 22, 2025 10:31 PM
பொதட்டூர்பேட்டை: நம் நாளிதழில் வெளியான செய்தியின் எதிரொலியாக, பொதட்டூர்பேட்டை பேருந்து நிலையத்தில் ஆக்கிரமித்து இருந்த தனியார் வாகனங்களை, பேரூராட்சி நிர்வாகம் அகற்றியது.
பொதட்டூர்பேட்டை பேருந்து நிலையம், 1.50 கோடி ரூபாய் மதிப்பில் புதுப்பிக்கப்பட்டது. இதில், 18 கடைகளுடன் வணிக வளாகமும், 25 அடி உயரத்தில் பிரமாண்டமான கூரையும் அமைக்கப்பட்டுள்ளது.
இதுவரை முறையாக திறப்பு விழா நடத்தப்படாத நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தனியார் வேன்களும், ஆட்டோக்களும் நிரந்தரமாக பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு வந்தன.
இதனால் பேருந்துக்காக காத்திருக்கும் பயணியர் கடும் அவதிப்பட்டு வந்தனர். பேருந்துகளில் இடம் பிடிக்க தனியார் வாகனங்களுக்கு இடையே புகுந்து செல்ல வேண்டிய நிலை இருந்தது.
இதுகுறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் வாகனங்களை, பேரூராட்சி நிர்வாகம் எச்சரித்து வெளியேற்றியது. இதனால், பயணியர் நிம்மதி அடைந்துள்ளனர்.