/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பொன்னேரி நகரில் 'சிசிடிவி' பொருத்த கோரிக்கை
/
பொன்னேரி நகரில் 'சிசிடிவி' பொருத்த கோரிக்கை
ADDED : ஆக 03, 2025 11:02 PM
பொன்னேரி:குற்ற செயல்களை கண்காணிக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பு கருதியும், பொன்னேரி நகர் முழுதும் 'சிசிடிவி' பொருத்த சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
பொன்னேரி நகரமானது சுற்றியுள்ள, 200 கிராமங்களின் கல்வி, தொழில், மருத்துவம் உள்ளிட்டவைகளுக்கான வர்த்தகம் மற்றும் சேவைமையமாகும்.
இங்கு, தினமும், ஆயிரக்கணக்கான மக்கள் பல்வேறு தேவைகளுக்கு வந்து செல்கின்றனர். அதேபோன்று பொன்னேரி நகரப்பகுதியில் குற்றவியல் நீதிமன்றங்கள், சார்பு நீதிமன்றம், உரிமையியல் நீதிமன்றம் உள்ளிட்ட, ஆறு நீதிமன்றங்கள் உள்ளன.
சார் - பதிவாளர் அலுவலகம், வட்டாட்சியர், சப்-கலெக்டர் அலுவலகங்களும், 10க்கும் மேற்பட்ட வங்கிகளும் உள்ளன. இவைகளுக்கும் கிராமங்களில் இருந்து பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.
இவர்களுக்கும், இவர்களின் உடமைகளுக்கும் பாதுகாப்பு அளிக்கும் வகையில், நகரின் முக்கிய பகுதிகளில் சிசிடிவி., பொருத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன், புதிய தேரடி தெரு, பழைய பேருந்து நிலையம், அம்பேத்கர் சிலை உள்ளிட்ட இடங்களில் சிசிடிவி.,க்கள் பொருத்தப்பட்டிருந்தன. காவல் துறையினருக்கு பல்வேறு வகையில் பயனுள்ளதாக இருந்தன. அவற்றை முறையாக பராமரிக்காமல் விட்டதால், தற்போது அவை மாயமாகி, இருந்த சுவடே இல்லை.
சிசிடிவி.,க்கள் இருந்தால், குற்ற செயல்களில் ஈடுபடுவர்களை எளிதில் கண்காணிக்கலாம். மேலும், அச்செயல்களில் ஈடுபடுபவர்களும் அச்சப்படுவர். பொன்னேரி காவல் துறையினர், தனியார் நிறுவனங்கள், வியாபாரிகள் ஒத்துழைப்புடன் நகர் முழுதும் சிசிடிவி., பொருத்தி கண்காணிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.