/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஊத்துக்கோட்டை பஸ் நிலையத்தில் நேர அட்டவணை வைக்க கோரிக்கை
/
ஊத்துக்கோட்டை பஸ் நிலையத்தில் நேர அட்டவணை வைக்க கோரிக்கை
ஊத்துக்கோட்டை பஸ் நிலையத்தில் நேர அட்டவணை வைக்க கோரிக்கை
ஊத்துக்கோட்டை பஸ் நிலையத்தில் நேர அட்டவணை வைக்க கோரிக்கை
ADDED : பிப் 13, 2024 06:39 AM
ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து சென்னை, செங்குன்றம், திருவள்ளூர், காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, ஆந்திர மாநிலம், திருப்பதி, நெல்லுார், காளஹஸ்தி மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட இடங்களுக்கு, 32 அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த பேருந்துகள் பஜார் பகுதியில் உள்ள அண்ணா பேருந்து நிலையத்திற்கு சென்று அங்கு பயணியரை ஏற்றி, இறக்கி செல்கின்றன.
இதேபோல், சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில், பாடியநல்லுார் பணிமனையில் இருந்து ஊத்துக்கோட்டை - செங்குன்றம் இடையே, 8 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஊத்துக்கோட்டை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளுக்கு தனியார் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. பேருந்து நிலையம் வரும் பயணியர் தாங்கள் செல்லும் ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் எத்தனை மணிக்கு வரும் என்பதை தெரிந்து கொள்ள ஒவ்வொரு பேருந்து நிலையத்திலும் நேர அட்டவணை இருக்கும்.
ஆனால், ஊத்துக்கோட்டை பேருந்து நிலையத்தில் விழுப்புரம் கோட்ட அரசு பேருந்துகள், மாநகர பேருந்துகள், தனியார் பேருந்துகள் வந்து செல்லும் நேர அட்டவணை வைக்கவில்லை. இதனால் எந்த பேருந்து, எத்தனை மணிக்கு வரும் என்பதை தெரிந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
பேருந்துகள் வரும் விபரத்தை அங்குள்ள நேரக்காப்பாளரிடம் கேட்டால், பேருந்து வரும் என, ஒற்றை பதிலில் முடித்துக் கொள்கிறார். எனவே, மாவட்ட போக்குவரத்துக் கழக அதிகாரிகள் ஊத்துக்கோட்டை பேருந்து நிலையத்தில் பேருந்துகள் வந்து செல்லும் நேர அட்டவணை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.