/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி துார்வாரி அகலப்படுத்த கோரிக்கை
/
கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி துார்வாரி அகலப்படுத்த கோரிக்கை
கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி துார்வாரி அகலப்படுத்த கோரிக்கை
கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி துார்வாரி அகலப்படுத்த கோரிக்கை
ADDED : அக் 19, 2025 10:16 PM

கும்மிடிப்பூண்டி: குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழாமல் இருக்க, கும்மிடிப்பூண்டி தாமரை ஏரியின் உபரிநீர் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, துார்வாரி அகலப்படுத்த வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கும்மிடிப்பூண்டி தாமரை ஏரியின் உபரி நீர், கோட்டக்கரை சந்திப்பில் உள்ள திருமண மண்டபம் எதிரே உள்ள உபரிநீர் கால்வாயில், ரெட்டம்பேடு சாலை வழியாக அடுத்தடுத்து உள்ள ஏரிகளுக்கு செல்கிறது.
இதில், கோட்டக்கரை - ரெட்டம்பேடு வரையிலான கால்வாயோரம் ஏராளமான ஆக்கிரமிப்பு கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. இதனால், 35 அடி அகலம் இருக்க வேண்டிய கால்வாய், ஆக்கிரமிப்புகளால் சுருங்கி, தற்போது, 10 - 15 அடி அகலம் மட்டுமே உள்ளது. இக்கால்வாயில் உபரிநீர் செல்ல முடியாதபடி செடி, கொடிகள் வளர்ந்துள்ளன.
இந்த ஆக்கிரமிப்புகளால், மழை காலங்களில் கால்வாய் வழியாக உபரிநீர் கடந்து செல்ல முடியாமல், சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகளில் கழிவுநீருடன் கலந்து மழைநீர் தேங்குகிறது.
இதனால், மக்களின் சுகாதாரம் மட்டுமின்றி, இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்படுகிறது. நீர்வளத்துறையினர் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து, ஆக்கிரமிப்புகளை அகற்றி கால்வாயை ஆழப்படுத்தி, விரிவாக்கம் செய்ய வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.