ADDED : பிப் 05, 2025 09:38 PM
பொன்னேரி:தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தின் சார்பில், பொன்னேரி வருவாய் துறை ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த, 23ம் தேதி, பொன்னேரி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். நேற்று, காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது:
கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். பணிக்காலத்தில் உயிரிழக்கும் கிராம உதவியாளர்கள் குடும்பத்திற்கு கருணை அடிப்படையில் வாரிசு வேலை வழங்க வேண்டும்.
கடந்த 2007க்கு பின், பணியில் சேர்ந்து உயிரிழந்த கிராம உதவியாளர்கள் குடும்பத்திற்கு பணப்பலன்களை வழங்க வேண்டும். கிராம உதவியாளர்களை கிராமப் பணிகளை தவிர, மாற்றுப் பணிகளில் ஈடுபடுத்துவதை தவிர்க்க வேண்டும். புதிதாக பணியில் சேர்ந்தவர்களுக்கு, சிபிஎஸ்., நிரந்தர எண் வழங்க வேண்டும்.
முதல் கட்டமாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம், இரண்டாம் கட்டமாக, காத்திருப்பு போராட்டம் நடத்தி உள்ளோம். மூன்றாம் கட்டமாாக, பிப். 27ல் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்த உள்ளோம். தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.