/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திடீர் கோடை மழையால் குளமாக மாறிய சாலை
/
திடீர் கோடை மழையால் குளமாக மாறிய சாலை
ADDED : ஏப் 17, 2025 01:53 AM

திருவள்ளூர் மாவட்டத்தில் இரண்டு மாதமாக வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது. பகல் நேரத்தில் அனல் காற்று வீசுவதால், பொதுமக்கள் மதியம் 12:00 - மாலை 4:00 மணி வரை வெளியில் செல்லாமல், வீட்டிற்குள் முடங்கினர்.
இந்த நிலையில், நேற்று பகல் 12:00 மணியளவில், திடீரென பலத்த காற்றுடன் மழை பெய்தது.
பொன்னேரி
பொன்னேரி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில், நேற்று காலை 9:00 மணிக்கு திடீரென பலத்த மழை பெய்தது. பொன்னேரி - பழவேற்காடு சாலையில் உள்ள திருவாயற்பாடி ரயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் குளம்போல் தேங்கியது.
அதில் பயணித்த அரசு பேருந்து பழுதாகி நின்றதால், பின்னால் வந்த வாகனங்கள் நெரிசலில் சிக்கின. இருசக்கர வாகனங்களில் செல்வோர், சுரங்கப்பாதையை பயன்படுத்த முடியாமல் சிரமத்திற்கு ஆளாகினர்.
சின்னகாவணம், மடிமைகண்டிகை, தேவராஞ்சேரி கிராமங்களில் தர்பூசணி பயிரிடப்பட்டிருந்த விவசாய நிலங்களில் மழைநீர் தேங்கியது.
பொன்னேரி அடுத்த பெருஞ்சேரி கிராமத்தில், நாளை தமிழக முதல்வர் பங்கேற்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்காக அமைக்கப்பட்டு வரும் பந்தல் மற்றும் அதை சுற்றிலும் உள்ள இடங்களில் மழைநீர் தேங்கியது. மழைநீர் தேங்கி சகதியாக மாறியதால், வாகனங்கள் அதில் சிக்கி தவித்தன.
திருமழிசை
திருமழிசை பேரூராட்சியில் நேற்று பெய்த மழையால், குடியிருப்பு பகுதியில் உள்ள சாலைகளில் மழைநீர் தேங்கியது. சில இடங்களில் மழைநீருடன், கழிவுநீரும் கலந்து குளம்போல் தேங்கியது. இதனால், பகுதிவாசிகள் நடந்து செல்ல முடியாமல் கடும் சிரமப்பட்டனர்.
இதற்கு, பாதாள சாக்கடை திட்டத்தில் உள்ள குறைபாடே, மழைநீர் வெளியேற முடியாததற்கு காரணம் என, பகுதிவாசிகள் குற்றம்சாட்டினர்.
கும்மிடிப்பூண்டி
கும்மிடிப்பூண்டி பகுதியில், காலை 9:00 மணியளவில் பலத்த காற்றுடன் மழை பெய்ய துவங்கியது. தொடர்ந்து, இரண்டு மணி நேரம் கனமழை வெளுத்து வாங்கியதால், சாலைகள் அனைத்தும் குளமாக மாறியது.
கும்மிடிப்பூண்டி ஜி.என்.டி., சாலை மற்றும் ரெட்டம்பேடு சாலையில் குளம் போல் தேங்கிய மழை வெள்ளத்தை சிரமத்துடன் வாகன ஓட்டிகள் கடந்து சென்றனர்.
கும்மிடிப்பூண்டி சிப்காட் வடக்கு சாலையில் மழைநீர் தேங்கி குளமானதால், தொழிற்சாலைகளுக்கான போக்குவரத்து பாதித்தது. கோரிமேடு, பாலகிருஷ்ணாபுரம் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளை மழை வெள்ளம் சூழ்ந்தது.
- நமது நிருபர் குழு -