ADDED : நவ 05, 2024 11:21 PM

திருவள்ளூர்:திருவள்ளூரில் பாதசாரிகள் நடைபாதையில் அமைக்கப்பட்ட தடுப்பு கம்பிகள் சேதமடைந்து உள்ளன.
திருவள்ளூர் ஜெ.என்.சாலை, சி.வி.நாயுடு சாலைகள் கடந்த, 9 ஆண்டுக்கு முன், நெடுஞ்சாலை துறையினர் 28 கோடி ரூபாய் மதிப்பில் அகலப்படுத்தினர். இதற்காக, சாலை நடுவில் தடுப்பு, சாலையின் இருபுறமும் மழைநீர் கால்வாய் வசதியுடன், பாதசாரிகள் நடைபாதை அமைக்கப்பட்டது. நடைபாதையை ஒட்டி, துருபிடிக்காத இரும்பு தடுப்பு கம்பி அமைக்கப்பட்டது.
அதன் பின், நெடுஞ்சாலை துறையினர் முறையாக நடைபாதையினை பராமரிக்கவில்லை. இதனால், இந்த சாலைகளில் அமைக்கப்பட்ட சமூக விரோதிகள், இரும்பு தடுப்பு கம்பினை உடைத்து, திருடிச் செல்கின்றனர். சில இடங்களில், இந்த தடுப்பு கம்பி உடைந்து, நடைபாதையை மறித்தபடி உள்ளது. இதனால், பாதசாரிகள், நடைபாதையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. மேலும், உடைந்த இரும்பு தடுப்பு கம்பிகளும் திருடு போகும் நிலை நிலவுகிறது.
எனவே, நெடுஞ்சாலை துறையினர், சாலையோர நடைபாதையில் அமைக்கப்பட்ட தடுப்பு கம்பிகளை முறையாக பராமரித்து சீரமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.