/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வகுப்பறைகள் கட்ட ரூ.5 கோடி ஒதுக்கீடு
/
வகுப்பறைகள் கட்ட ரூ.5 கோடி ஒதுக்கீடு
ADDED : ஜூன் 21, 2025 09:51 PM
திருத்தணி:திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், தற்போது, 14 பள்ளிகளில் வகுப்பறைகள் கட்டுவதற்கு, குழந்தைகள் நேய பள்ளி உட்கட்டமைப்பு திட்டத்தின் வாயிலாக, 5.04 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதில், 12 பள்ளிகளில்,ரூ. 4.35 கோடியில், மொத்தம் 25 புதிய வகுப்பறைகள் கட்டுவதற்கு நிர்வாக அனுமதி வழங்கி, பணிகளுக்கு 'டெண்டர்' விடப்பட்டுள்ளது. 'இப்பணிகளை ஆறு மாதத்திற்குள் முடித்து, பயன்பாட்டிற்கு விட வேண்டும்' என, கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டத்தில், 14 ஒன்றியங்களில் 526 ஊராட்சிகள் உள்ளன. இங்கு, 984 அரசு தொடக்கப்பள்ளி, 257 அரசு நடுநிலைப் பள்ளி, 130 அரசு உயர்நிலை பள்ளி, 119 அரசு மேல்நிலைப் பள்ளி என, மொத்தம் 1,490 அரசு பள்ளிகள் இயங்கி வருகின்றன.
இதில், தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளை ஒன்றிய நிர்வாகம் பராமரித்து வருகிறது. மீதமுள்ள பள்ளிகளை பொதுப்பணித் துறை பராமரித்து வருகிறது. மாவட்டத்தில் பெரும்பாலான தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் போதிய வகுப்பறை கட்டடங்கள் இல்லாமல், மாணவர்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.
குழந்தைகள் நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம் 2025 - 26ம் ஆண்டின் கீழ், 14 ஒன்றியங்களில், 29 புதிய வகுப்பறைகள் கட்டுவதற்கு, 5.04 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து அராசணை வெளியிடப்பட்டு உள்ளது.
முதற்கட்டமாக, 25 புதிய வகுப்பறைகள், 4.35 கோடி ரூபாயில் கட்டுவதற்கு நிர்வாக அனுமதி வழங்கி, நேற்று முன்தினம் பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு, ஒன்றிய அதிகாரிகள் பணி துவங்குவதற்கான உத்தரவை நாளை வழங்க உள்ளனர்.
புதிய வகுப்பறைகள் கட்டும் பணிகள், ஆறு மாதத்திற்குள் முடித்து மாணவர்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என, கலெக்டர் பிரதாப், ஒன்றிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்திஉள்ளார்.
புதிய வகுப்பறை கட்டடங்களால், மாணவர்களின் கற்றல் திறன் அதிகரிக்கவும், பாதுகாப்பு மற்றும் சுகாதார வசதி ஏற்படுத்தும் என, மாவட்ட நிர்வாகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.