/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கும்மிடி தொழிற்சாலைகள் கழிவுநீர் லாரிகள் வாயிலாக வெளியேற்றம்
/
கும்மிடி தொழிற்சாலைகள் கழிவுநீர் லாரிகள் வாயிலாக வெளியேற்றம்
கும்மிடி தொழிற்சாலைகள் கழிவுநீர் லாரிகள் வாயிலாக வெளியேற்றம்
கும்மிடி தொழிற்சாலைகள் கழிவுநீர் லாரிகள் வாயிலாக வெளியேற்றம்
ADDED : ஜன 01, 2025 12:30 AM

கும்மிடிப்பூண்டி, கும்மிடிப்பூண்டி பகுதியில் சிப்காட் மற்றும் அதை சுற்றியுள்ள கிராம பகுதிகள் என, 320 தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. பெரும்பாலான தொழிற்சாலைகள், மாசு கட்டுப்பாட்டு விதிகளை மீறி, அதன் திரவ மற்றும் திடக் கழிவை கையாள்வதில் அலட்சியம் காட்டி வருவதால், சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது.
அதை தடுக்கும் பொருட்டு, மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் அனைத்து தொழிற்சாலைகளுக்கும் பல முறை எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
பசுமை திட்டம்
அதன்படி, தொழிற்சாலைகளில் சேகரமாகும் திரவக் கழிவை, அந்தந்த தொழிற்சாலை வளாகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள சுத்திகரிப்பு நிலையம் வாயிலாக சுத்திகரிப்பு செய்து, அதை தொழிற்சாலை வளாகத்திற்குள் உள்ள பசுமை திட்டத்திற்கு பயன்படுத்த வேண்டும்.
அதை மீறி திறந்தவெளியில் திரவக் கழிவை வெளியேற்றவோ, கழிவுநீர் வாகனங்கள் வாயிலாக அப்புறப்படுத்தவோ கூடாது.
'மேலும், தொழிற்சாலைகளுக்குள் கழிவுநீர் வாகனங்கள் நுழைந்தால், சம்பந்தப்பட்ட தொழிற்சாலை மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல திடக்கழிவையும் மாசு கட்டுப்பாட்டு விதிமுறைகளுக்கு உட்பட்டு முறையாக அப்புறப்படுத்த வேண்டும்.
'தொழிற்சாலைகள், கழிவை முறையாக கையாள்கின்றனரா என்பது தீவிரமாக கண்காணிக்கப்படும்' என, தெரிவிக்கப்பட்டிருந்தது.
நிலத்தடி நீர் பாதிப்பு
ஆனால், அதை பல தொழிற்சாலைகள் பின்பற்றவும் இல்லை, சுற்றுச்சூழல் துறையினரும் அதை முறையாக கண்காணிக்கவும் இல்லை என, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
தொழிற்சாலைகளில் சேகரமாகும் திரவக் கழிவை சுத்திகரிப்பு செய்யாமல், அப்படியே கழிவுநீர் வாகனங்கள் வாயிலாக வெளியேற்றப்பட்டு வருகின்றன.
டேங்கர் லாரிகளில் சேகரிக்கப்படும் தொழிற்சாலை கழிவுநீர் நேராக நீர்நிலைகளில் கலக்கும் மழைநீர் கால்வாயில் திறந்து விடப்படுகின்றன.
இதனால் கும்மிடிப்பூண்டி பகுதியில் உள்ள நீர்நிலைகளும், நிலத்தடி நீரும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றன.
கும்மிடிப்பூண்டியில் இயங்கி வரும் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகத்தில் பல முறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுப்பதில்லை என, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
மாசு கட்டுப்பாட்டு விதிகள் மீறி செயல்படும் தொழிற்சாலைகள் மீது சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர்.