sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

காட்டுப்பள்ளி கடற்கரை சாலையில் குவியும் மணல்...தொடர்கதை!:ஆம்புலன்ஸ் வாகனம் கூட செல்ல முடியாத அவலம்

/

காட்டுப்பள்ளி கடற்கரை சாலையில் குவியும் மணல்...தொடர்கதை!:ஆம்புலன்ஸ் வாகனம் கூட செல்ல முடியாத அவலம்

காட்டுப்பள்ளி கடற்கரை சாலையில் குவியும் மணல்...தொடர்கதை!:ஆம்புலன்ஸ் வாகனம் கூட செல்ல முடியாத அவலம்

காட்டுப்பள்ளி கடற்கரை சாலையில் குவியும் மணல்...தொடர்கதை!:ஆம்புலன்ஸ் வாகனம் கூட செல்ல முடியாத அவலம்


ADDED : ஜூலை 04, 2024 01:11 AM

Google News

ADDED : ஜூலை 04, 2024 01:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழவேற்காடு:பழவேற்காடு - காட்டுப்பள்ளி சாலை சேதமடைந்து சீரமைக்கப்படாமல் இருக்கும் நிலையில், கடற்கரை மணல் அடிக்கடி சாலையில் குவிந்து வருவது தொடர்கதையாக இருப்பதால், போக்குவரத்து பாதித்து வாகன ஓட்டிகள் பெரும் தவிப்பிற்கு ஆளாகி உள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு -- காட்டுப்பள்ளி இடையே உள்ள, 13 கி.மீ., தொலைவிற்கான கிழக்கு கடற்கரை சாலையில் லைட்ஹவுஸ் குப்பம், வைரவன்குப்பம், காளஞ்சி, கருங்காலி உள்ளிட்ட 15 மீனவ கிராமங்கள் உள்ளன.

இந்த சாலை 10 ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் உள்ளது. சாலை முழுதும் பள்ளங்கள் ஏற்பட்டு, கரடு முரடாக மாறி போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. பழைய சாட்டன்குப்பம், கோரைகுப்பம், காளஞ்சி, கருங்காலி ஆகிய கிராமங்கள் கடற்கரைக்கு மிக அருகாமையில் அமைந்துள்ளன.

கடும் அவதி


கடல் சீற்றம் அதிகரிக்கும் நேரங்களில், ராட்சத அலைகளால் கடற்கரை மணலுடன் கடல்நீர் சாலையில் பாய்கிறது. 2 அடி உயரத்திற்கு மணல் குவிந்துவிடுவதால், வாகன போக்குவரத்து பாதிக்கிறது.

கிழக்கு கடற்கரை சாலையை, மீனவ கிராமங்களில் உள்ளவர்கள் மட்டுமின்றி, அத்திப்பட்டு புதுநகர், காட்டுபள்ளி, எண்ணுார், வல்லுார் ஆகிய பகுதிகளில் அமைந்திருக்கும் அனல்மின் நிலையங்கள், எண்ணெய் மற்றும் எரிவாயு முனையங்கள், துறைமுகங்கள் உள்ளிட்ட தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களும் பயணிக்கின்றனர்.

அடிக்கடி கடற்கரை மணல், கடற்கரை மணல் சாலையில் குவிவதால், மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதனால், இருசக்கர வாகனங்களை தள்ளிக்கொண்டு செல்லும் நிலை உள்ளது.

மாற்று வழித்தடம் என்றால், பொன்னேரி - பழவேற்காடு சாலையில் பயணித்து, வஞ்சிவாக்கம், காட்டூர், மீஞ்சூர் வழியாக, 30 - 40 கி.மீ., சுற்றிக் செல்ல வேண்டிய நிலை ஏற்படும். காலவிரயம், கூடுதல் எரிபொருள் செலவு ஆகியவற்றை எண்ணி, கரடு முரடான சாலையில் பயணித்து, மணல் குவிந்துள்ள இடங்களில் இரு சக்கர வாகனங்களை தள்ளிக்கொண்டு செல்கின்றனர்.

அதே சமயம் கார், வேன் உள்ளிட்டவை, அந்த சாலையில் பயணிப்பதை முற்றிலும் தவிர்த்து, வஞ்சிவாக்கம், மீஞ்சூர் வழியாக சென்று வருகின்றன.

குறிப்பாக, காளஞ்சி -- கருங்காலி இடையே உள்ள வளைவுப்பபகுதி சாலையில், 200 மீ., தொலைவிற்கு அதிகளவில் கடற்கரை மணல் குவிகிறது.

இந்நிலையில், நேற்று அதிகாலையும் கடல் சீற்றம் காரணமாக, கடல்நீருடன் கடற்கரை மணல் பழவேற்காடு - காட்டுப்பள்ளி சாலையில் குவிந்தது.

இதனால், மீனவர்கள் மற்றும் பல்வேறு தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் சிரமத்திற்கு ஆளாகினர். இருசக்கர வாகன ஓட்டிகள், சாலையில் குவிந்திருந்த மணலில், தங்களது வாகனங்களை தள்ளிக்கொண்டு சென்றனர்.

நடவடிக்கை இல்லை


கடந்த ஆறு மாதங்களாக கடற்கரை மணல், சாலையில் குவிவது தொடர்கதையாக இருப்பதால்,வாகன ஓட்டிகள் பெரும் தவிப்பிற்கு ஆளாகி உள்ளனர்.

இதுகுறித்து தொழிலாளர்கள் மற்றும் மீனவர்கள் கூறியதாவது:

சேதமடைந்துள்ள சாலையில் பள்ளங்களை தவிர்க்க வளைந்து வளைந்து, தினமும் மரண பயத்துடன் சென்று வருகிறேம். தற்போது, அடிக்கடி கடற்கரை மணலும் குவிகிறது.

இருசக்கர வாகனங்களை மணலில் தள்ளிக்கொண்டு செல்லும்போது, உதிரிபாகங்கள் சேதமாகிறது. கட்டாயம் இருவர் உதவியுடன் தான் வாகனத்தை தள்ள முடியும்.

இந்த சாலை, ஒன்றிய நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் இருந்து, மாநில நெடுஞ்சாலைத்துறையின் இதர மாவட்ட சாலைகள் பிரிவில் ஒப்படைக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.

அவசர உதவிக்கு ஆம்புலன்ஸ்கள் கூட சென்று வருவதற்கும் வழியில்லை. சாலையில் குவிந்துள்ள மணலை அவ்வப்போது அகற்றுவதும் இல்லை.

நிரந்தர தீர்வு காணும் வகையில், கடற்கரை மணல் குவியும் இடங்களில் உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும்.

இந்த சாலையில் பல்வேறு பெரிய தொழில் நிறுவனங்கள் இருப்பதால், அவற்றின் ஒத்துழைப்புடன் சி.எஸ்.ஆர்., நிதியில் தரமான சாலை அமைக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us