/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கிருஷ்ணா கால்வாயில் செல்லும் மணல் லாரிகள் ஒருபுறம் சீரமைப்பு; மறுபுறம் அலட்சியம்
/
கிருஷ்ணா கால்வாயில் செல்லும் மணல் லாரிகள் ஒருபுறம் சீரமைப்பு; மறுபுறம் அலட்சியம்
கிருஷ்ணா கால்வாயில் செல்லும் மணல் லாரிகள் ஒருபுறம் சீரமைப்பு; மறுபுறம் அலட்சியம்
கிருஷ்ணா கால்வாயில் செல்லும் மணல் லாரிகள் ஒருபுறம் சீரமைப்பு; மறுபுறம் அலட்சியம்
ADDED : பிப் 24, 2024 08:36 PM

ஊத்துக்கோட்டை:தமிழக அரசு பலகோடி ரூபாய் மதிப்பில், கிருஷ்ணா கால்வாயை ஒரு பக்கம் சீர்படுத்தி வரும்நிலையில், மறுபக்கம் கால்வாயில் செல்லும் மணல் லாரிகளால், கால்வாய் உடையும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
தமிழக -- ஆந்திர அரசுகள் இடையே, 1983ல் கிருஷ்ணா நதிநீர் ஒப்பந்தம் போடப்பட்டது.
இதன்படி, கண்டலேறு அணையில் இருந்து இரண்டு தவணைகளில், 12 டி.எம்.சி., கிருஷ்ணா நீர் தர வேண்டும். இதற்காக கண்டலேறு அணையில் இருந்து, தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோபாயின்ட் மற்றும் அங்கிருந்து பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம் வரை, 177 கி.மீ., துாரத்திற்கு கால்வாய் வெட்டப்பட்டது.
இப்பணி, 13 ஆண்டுகள் நடந்த நிலையில், 1996ல் முதன் முறையாக கிருஷ்ணா நீர் தமிழகத்திற்கு வந்தது.
துவக்கத்தில் கால்வாயின் சிமென்ட் சிலாப்புகள் சரிவு ஆகிய காரணங்களால் கிருஷ்ணா நீர் தமிழகத்திற்கு வர, 10 நாட்களுக்கு மேல் ஆனது.
புட்டபர்த்தி சாய்பாபா டிரஸ்ட் வாயிலாக பல கோடி ரூபாய் மதிப்பில் கால்வாய் சீரமைக்கப்பட்டது. இதனால் மூன்று நாட்களில் தமிழகத்திற்கு கிருஷ்ணா நீர் வருகிறது.
கடந்த, 2020ம் ஆண்டு தமிழக எல்லையில் இருந்து, 3வது கி.மீட்டர் முதல், 10வது கி.மீட்டர் வரை, ஏழு கி.மீ., துாரத்திற்கு கால்வாய் சேதம் அடைந்து காணப்பட்டது. இதற்காக 24 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து பணி துவங்கி நடந்தது.
இதில், 75 சதவீத பணிகள் நிறைவு பெற்ற நிலையில், டிச., மாதம் 'மிக்ஜாம்' புயலால் பெய்த மழையில் கால்வாயின் சிமென்ட் சிலாப்புகள் முழுதும் பெயர்ந்தது.
இதுகுறித்து நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதைத் தொடர்ந்து தற்போது சேதம் அடைந்த பகுதிகளை சீர்படுத்தும் பணி நடந்து வருகிறது.
தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோபாயின்ட்டில் ஒரு இடத்தில் சேமித்து வைத்த மணலை எடுக்க அரசு அனுமதி அளித்த நிலையில், மணலை எடுத்து செல்லும் லாரிகள் கிருஷ்ணா கால்வாய் மேல் செல்கின்றன.
தமிழக நீர்வள ஆதாரத் துறை அதிகாரிகளின் அலட்சியப் போக்கால் கிருஷ்ணா கால்வாய் மீது அதிக பாரம் கொண்ட மணல் லாரிகள் அதி வேகமாக செல்வதால், கிருஷ்ணா கால்வாய் முழுதும் உடையும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
கால்வாயின் ஒரு பக்கம் கோடிக்கணக்கில் செலவு செய்து கிருஷ்ணா கால்வாயை சீர்படுத்தி வரும் நிலையில், மறுபக்கம் அதிகாரிகளின் அலட்சியப் போக்கால் நல்ல நிலையில் இருக்கும் கிருஷ்ணா கால்வாயில் மணல் லாரிகள் செல்வதால் சேதம் அடையும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. எனவே, மாவட்ட கலெக்டர் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.