/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை தண்ணீரை ஆற்றில் விட.. எதிர்ப்பு! . போலீஸ் பாதுகாப்புடன் குழாய் பதிப்பு பணிகள் தீவிரம்
/
கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை தண்ணீரை ஆற்றில் விட.. எதிர்ப்பு! . போலீஸ் பாதுகாப்புடன் குழாய் பதிப்பு பணிகள் தீவிரம்
கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை தண்ணீரை ஆற்றில் விட.. எதிர்ப்பு! . போலீஸ் பாதுகாப்புடன் குழாய் பதிப்பு பணிகள் தீவிரம்
கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை தண்ணீரை ஆற்றில் விட.. எதிர்ப்பு! . போலீஸ் பாதுகாப்புடன் குழாய் பதிப்பு பணிகள் தீவிரம்
ADDED : ஆக 18, 2025 11:25 PM

பொன்னேரி : பொன்னேரி நகராட்சியில், 62.82 கோடி ரூபாயில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதாள சாக்கடை திட்டத்தின் இறுதிகட்டமாக, கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு, நன்னீரை ஆரணி ஆற்றில் விட திட்டமிடப்பட்டுள்ள நிலையில், கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் குழாய் பதிப்பு பணிகள் நடந்து வருகின்றன. திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி நகராட்சியில் முதல்கட்டமாக, 22 வார்டுகளில், 62.82 கோடி ரூபாயில், 41.45 கி.மீ., தொலைவிற்கு பாதாள சாக்கடை திட்டத்திற்கான பணிகள், 2018ல் துவக்கப்பட்டு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
குடியிருப்பு மற்றும் வணிக வளாகங்களில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரை சுத்திகரித்து, அதிலுள்ள கசடுகளை அகற்றி, நன்னீராக மாற்றப்பட உள்ளது.
இதற்காக, பொன்னேரி நகராட்சிக்கு உட்பட்ட பெரியகாவணம் பகுதியில், தினமும் 60 லட்சம் லிட்டர் கழிவுநீரை சுத்திகரிப்பதற்கான ஆலை நிறுவப்பட்டு உள்ளது. கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்ட பின், வெளியேறும் நன்னீரை ஆரணி ஆற்றில் விடுவதற்கு திட்டமிடப்பட்டு உள்ளது.
இதற்காக சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து, 3.8 கி.மீ., தொலைவிற்கு குழாய் பதித்து, லட்சுமிபுரம் அணைக்கட்டின் கிழக்கு பகுதியில் உள்ள ஆற்றில் விடுவதற்கான பணிகள், கடந்த பிப்ரவரி மாதம் துவக்கப்பட்டன.
இதற்கு, ஆரணி ஆற்று கரையோர கிராமங்களில் வசிப்பவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், குழாய் பதிப்பு பணிகள் நிறுத்தப்பட்டன. கிராம மக்களிடம் அதிகாரிகள் பேச்சு நடத்தியும் தீர்வு எட்டப்படவில்லை.
இந்நிலையில், கிராம மக்களின் எதிர்ப்பையும் மீறி, நேற்று குழாய் பதிப்பு பணிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மேற்கொள்ளப்பட்டன.
லட்சுமிபுரம் அணைக்கட்டு அருகே, இதற்காக பள்ளம் தோண்டும் பணிகளை துவக்கியபோது, கிராம மக்கள் சிலர் அங்கு கூடி, அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து கிராம மக்கள் கூறியதாவது:
கிராம மக்களின் பல்வேறு தேவைகளுக்கும், கால்நடைகளின் குடிநீர் ஆதாரமாக ஆற்று நீர் உள்ளது. கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் கலக்கும்போது, ஆற்று நீர் மாசடையும். ஆழ்துளை மோட்டார்கள் பாதிப்படையும்.
ஆற்றுநீருடன் பாதாள சாக்கடை திட்ட தண்ணீர் கலக்கும்போது, மீன்பிடி தொழில் செய்வோரின் வாழ்வாதாரம் பாதிக்கும்
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதற்கு அதிகாரிகள், 'பல்வேறு நிலைகளில் 100 சதவீதம் கழிவுநீரை முழுமையாக சுத்திகரித்த பின்பே ஆற்றில் விடப்படும். மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் வழிகாட்டுதல்களை பின்பற்றியே நடைமுறைப்படுத்தப்படும்' என தெரிவித்தனர்.
அதிகாரிகள் பேச்சு நடத்தியும் கிராம மக்கள் ஏற்கவில்லை. இது தொடர்பாக, 'மாவட்ட நிர்வாகம் மற்றும் பசுமை தீர்ப்பாயத்தில் சென்று முறையிடுவோம்' என தெரிவித்தனர்.
அதேசமயம், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் குழாய் பதிப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்றன. 'பொக்லைன்' இயந்திரத்தின் உதவியுடன் பள்ளம் தோண்டி, கிரேனில் ராட்சத உருளைகள் கொண்டு வரப்பட்டு பதிக்கப்பட்டன.
குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், பொன்னேரி நகராட்சி அதிகாரிகள், வருவாய்த்துறையினர் அங்கு முகாமிட்டிருந்தனர். கிராம மக்கள் பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே, குழாய் பதிப்பு பணிகளால், தங்கள் கிராமத்திற்கான குடிநீர் ஆதாரம் பாதிக்கும் எனக்கூறி, அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெரும்பேடு முன்னாள் ஊராட்சி தலைவர் ராஜேஷை, போலீசார் பிடித்து வைத்திருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்த பெரும்பேடு குப்பம் கிராமத்தினர், சின்னகாவணம் பகுதியில் குவிந்தனர். போலீசார் அவர்களை சமாதானம் செய்தனர். ராஜேஷை விடுவித்த பின், அவர்கள் கலைந்து சென்றனர்.
செங்குன்றம் துணை கமிஷனர் பாலாஜி தலைமையில், உதவி கமிஷனர்கள் சங்கர், வீரகுமார் மேற்பார்வையில், 200க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.
போராட்டத்தில் ஈடுபடுவோரை கைது செய்து அழைத்து செல்வதற்காக, நான்கு அரசு பேருந்துகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. அசம்பாவிதங்களை தவிர்க்க, பொன்னேரி தீயணைப்பு வாகனமும் தயார் நிலையில் இருந்தது.
இந்த குழாய் பதிப்பு பணிகளால் அப்பகுதி பரபரப்புடன் இருந்தது. கிராம மக்களின் அச்சத்தை போக்கி, திட்டப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.