/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஊத்துக்கோட்டை அரசு மருத்துவமனையில் செவிலியர்கள், ஊழியர்கள் பற்றாக்குறை நீண்ட நேரம் காத்திருக்கும் நோயாளிகள்
/
ஊத்துக்கோட்டை அரசு மருத்துவமனையில் செவிலியர்கள், ஊழியர்கள் பற்றாக்குறை நீண்ட நேரம் காத்திருக்கும் நோயாளிகள்
ஊத்துக்கோட்டை அரசு மருத்துவமனையில் செவிலியர்கள், ஊழியர்கள் பற்றாக்குறை நீண்ட நேரம் காத்திருக்கும் நோயாளிகள்
ஊத்துக்கோட்டை அரசு மருத்துவமனையில் செவிலியர்கள், ஊழியர்கள் பற்றாக்குறை நீண்ட நேரம் காத்திருக்கும் நோயாளிகள்
ADDED : ஜூன் 23, 2025 11:05 PM

ஊத்துக்கோட்டை, ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் உள்ள அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனையில், ஊழியர்கள் பற்றாக்குறையால் நுழைவு சீட்டு, நோயாளிகளுக்கு தேவையான உதவிகளை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், நோயாளிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
தமிழக - ஆந்திர எல்லையில் ஊத்துக்கோட்டை பேரூராட்சி அமைந்துள்ளது. இங்கு, 20,000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.
இதைச் சுற்றியுள்ள தொம்பரம்பேடு, தாராட்சி, பாலவாக்கம், போந்தவாக்கம், சீத்தஞ்சேரி மற்றும் ஆந்திர எல்லையில் உள்ள தாசுகுப்பம், சுருட்டப்பள்ளி உள்ளிட்ட, 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்களின் அத்தியாவசி தேவைக்கு ஊத்துக்கோட்டை வந்து செல்கின்றனர்.
இப்பகுதி மக்களின் மருத்துவ தேவைக்காக, கடந்த 1981ம் ஆண்டு அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனை துவக்கப்பட்டது. அப்போது இருந்த மக்கள் தொகைக்கு ஏற்ப மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் மற்றும் கட்டடம் போதுமானதாக இருந்தது.
பின், மக்கள் தொகை பெருக்கம் காரணமாக இடப்பற்றாக்குறை ஏற்பட்டது. கடந்த 2009ம் ஆண்டு 73.75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புறநோயாளிக்காக புதிய கட்டடம் கட்டப்பட்டது. தற்போது, இங்கு உள்நோயாளிகள் தங்கி சிகிச்சை பெற, 50 படுக்கைகள் உள்ளன.
இங்கு, தினமும் 500 - 600 நோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர். தலைமை மருத்துவர் மற்றும் ஐந்து மருத்துவர்கள், 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியில் உள்ளனர்.
ஆறு செவிலியர் பணியிடங்களில், நான்கு பேர் மட்டுமே பணியில் உள்ளனர். இரு இடங்கள் காலியாக உள்ளது. அலுவலக உதவியாளர்கள் நான்கு பேரில் ஒருவர் மட்டுமே பணியில் உள்ளார்.
இதனால், தினமும் வரும் நோயாளிகளுக்கு அனுமதி சீட்டு வழங்குவது முதல், நோயாளிகளுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுப்பது வரை நிறைவேற்ற முடியாத நிலை உள்ளது. வயதான காலத்தில் அனுமதி சீட்டு வாங்க நெடுநேரம் காத்திருக்க வேண்டியுள்ளது.
அதேபோல், மகப்பேறு உதவியாளர் ஒருவர், துாய்மை பணியாளர் இருவர், இரவு காவலர் ஒருவர், சமையல் உதவியாளர் ஒருவர், ஆய்வக பணியாளர் ஒருவர் என, பெரும்பாலான பணியிடங்கள் காலியாக உள்ளன.
இதனால், இங்கு வரும் நோயாளிகள், ஒவ்வொரு தேவைக்கும் நெடுநேரம் காத்திருக்க வேண்டிய அவலநிலை உள்ளது. கடந்தாண்டு இங்கு, ஆப்பரேஷன் தியேட்டர் கட்டப்பட்டது. ஆனால், அதற்கான உபகரணங்கள் இதுவரை வராததால், கட்டடம் வீணாகி வருகிறது.
இதனால், அவசர மருத்துவ உதவிக்கு வரும் நோயாளிகள், திருவள்ளூர் மருத்துவமனைக்கு அனுப்பப்படுகின்றனர்.
எனவே, தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து, ஊத்துக்கோட்டை அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனைக்கு செவிலியர்கள், ஊழியர்களை உடனடியாக பணியமர்த்த வேண்டும் என, நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஊத்துக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு மாதம் ஒரு முறை சர்க்கரை மாத்திரை வாங்குகிறோம். நுழைவு சீட்டு வாங்குவது முதல் சர்க்கரை, பிபி பார்த்து மருத்துவரை சந்திக்கும் வரை நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. இதனால், வீட்டில் இருந்து சாப்பாடு கட்டி வரும் நிலை உள்ளது. இதனால், மன உளைச்சல் ஏற்படுகிறது.
- நோயாளிகள்,
ஊத்துக்கோட்டை.