/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
போக்குவரத்து போலீசார் பற்றாக்குறை ஆவடி காவல் ஆணையரகத்தில் திணறல்
/
போக்குவரத்து போலீசார் பற்றாக்குறை ஆவடி காவல் ஆணையரகத்தில் திணறல்
போக்குவரத்து போலீசார் பற்றாக்குறை ஆவடி காவல் ஆணையரகத்தில் திணறல்
போக்குவரத்து போலீசார் பற்றாக்குறை ஆவடி காவல் ஆணையரகத்தில் திணறல்
ADDED : நவ 30, 2024 01:07 AM

ஆவடி:ஆவடி காவல் ஆணையரகத்தில் போக்குவரத்து போலீசார் பற்றாக்குறையால், போக்குவரத்து சீர் செய்வது மற்றும் விதிமீறல்களை கண்காணிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சென்னை மாநகர காவல் ஆணையரக கட்டுப்பாட்டில் இருந்து, 25 காவல் நிலையங்கள் தனியாக பிரிக்கப்பட்டு, 2022ல் ஆவடி காவல் ஆணையரகம் உருவாக்கப்பட்டது. ஆவடி காவல் ஆணையரகத்தில் 4,873 போலீசார் பணிபுரிந்து வருகின்றனர்.
ஆவடி காவல் ஆணையரகத்தில் பட்டாபிராம், ஆவடி, அம்பத்துார், பூந்தமல்லி, போரூர் எஸ்.ஆர்.எம்.சி., செங்குன்றம், மணலி, எண்ணுார் மற்றும் பொன்னேரி என, ஒன்பது போக்குவரத்து காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.
ஆவடி காவல் மாவட்டத்தை பொறுத்தவரை, ஆவடி காமராஜர் நகர் சந்திப்பு, திருமுல்லைவாயில் சத்தியமூர்த்தி நகர், பாரிவாக்கம், சவீதா பல் மருத்துவமனை, சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, திருமழிசை சந்திப்பு, போரூர் ரவுண்டானா, அய்யப்பன்தாங்கல் பேருந்து நிலையம் உட்பட, 35 இடங்களில் போக்குவரத்து சிக்னல் நிறுவப்பட்டுள்ளது.
மேலும், வண்டலுார் - மீஞ்சூர் வெளிவட்ட சாலை, சென்னை - திருத்தணி தேசிய நெடுஞ்சாலை, ஜி.என்.டி செட்டி சாலை, மணலி விரைவு சாலை உட்பட, 36 இடங்கள் விபத்து நடக்கும் பகுதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளன.
அங்கு காலை, மாலை நேரங்களில், போக்குவரத்து போலீசார் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஒவ்வொரு போக்குவரத்து காவல் நிலையமும், மூன்று காவல் நிலையங்களை உள்ளடக்கி செயல்பட்டு வருகிறது. இதில் இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., உட்பட 387 பேர் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனர்.
இதனால், போக்குவரத்து ஒழுங்குபடுத்துவது மற்றும் போக்குவரத்து விதிமீறல்களை கண்காணிப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஒவ்வொரு காவல் நிலையத்தில், போதுமான போக்குவரத்து போலீசார் இல்லாததால், விதிமீறல் மற்றும் விபத்துகள் அதிகரித்துள்ளது. இதனால், கூடுதல் பணி சுமையால் போலீசார் பலர், மன உளைச்சலில் பணியாற்றி வருகின்றனர்.
எனவே, மாறி வரும் மக்கள் நெருக்கடி மற்றும் போக்குவரத்து பிரச்னையால், ஒவ்வொரு போக்குவரத்து காவல் நிலையத்தில் புதிதாக, 30 முதல் 40 ஆண் போலீசாரை நியமிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
சென்னை மாநகர காவல் ஆணையரகத்தில் வழங்கப்பட்ட 'இ சலான்' மற்றும் மது போதையில் வாகனம் ஓட்டுவோரை கண்காணிக்கும் 'ப்ரீத் அனலைசர்' கருவிகள் தான், அடிக்கடி பழுது நீக்கி பயன்படுத்தி வருகின்றனர். இதுவரை புதிதாக கருவிகள் வாங்கவில்லை என கூறப்படுகிறது.
மேலும், புதிதாக உருவாக்கப்பட்ட பொன்னேரி போக்குவரத்து காவல் நிலையத்தில், தற்போது வரை இங்கு போதுமான போலீசார் நியமிக்கப்படவில்லை. அந்த காவல் நிலையம் வெறும் இன்ஸ்பெக்டருடன் செயல்பட்டு வருகிறது.
அதேபோல் நசரத்பேட்டை, வெள்ளவேடு மற்றும் செவ்வாப்பேட்டை காவல் நிலையங்களை இணைத்து புதிய போக்குவரத்து காவல் நிலையம் உருவாக்க வேண்டும்.
போக்குவரத்து போலீஸ்காரர் ஒருவர் கூறியதாவது:
ஆவடி மாநகராட்சி அசுர வளர்ச்சி அடைந்து வருகிறது. ஆவடியில் பல மத்திய அரசு மற்றும் மாநில அரசு நிறுவனங்கள் செயல்படுகின்றன. அடுத்தகட்டமாக ஆவடி அடுத்த பட்டாபிராமில், மாநிலத்தின் மூன்றாவது 'டைடல் பார்க்' கட்டடமும் புதிதாக திறக்கப்பட்டுள்ளது.
இதில், 6,000க்கும் மேற்பட்டோர் பணிபுரிய உள்ளனர். இதனால், போக்குவரத்து பிரச்னையும் அதிகரிக்கும் சூழல் உள்ளது. ஆனால் போதுமான போலீசார் இல்லாததால், பணி சுமை ஏற்பட்டுள்ளது.