இறால் பதப்படுத்தும் தொழிற்சாலைக்கு 'சீல்' மாசு கட்டுப்பாட்டு அனுமதிக்கு காத்திருப்பு
இறால் பதப்படுத்தும் தொழிற்சாலைக்கு 'சீல்' மாசு கட்டுப்பாட்டு அனுமதிக்கு காத்திருப்பு
UPDATED : ஜூலை 14, 2026 06:57 AM
ADDED : ஜூலை 13, 2026 11:15 PM

ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அருகே, 18 பேரை பலி வாங்கிய இறால் பதப்படுத்தும் தொழிற்சாலைக்கு 'சீல்' வைக்கும் பணி, மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி வழங்காததால் தாமதமாகிறது.
தி ருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அடுத்த கன்னிகைப்பேர் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஒடிஷா, அசாம், ஜார்க்கண்ட் மற்றும் உள்ளூர் மக்கள் பணியாற்றி வந்தனர்.
கடந்த 21ம் தேதி, இங்கு அமோனியா வாயு கசிவு ஏற்பட்டது. இந்த விபத்தில், தொழிற்சாலையில் இருந்த 83 வடமாநில தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர். இவர்களில், 18 பெண்கள் உயிரிழந்தனர்.
தொழில்நுட்ப வல்லுனர்கள், காவல், தீயணைப்பு, தொழில் பாதுகாப்பு உள்ளிட்ட துறையினருடன் சேர்ந்து, 400 டன் கடல் உணவுகள், 3 டன் அமோனியா வாயு அகற்றப்பட்டன.
தொழிற்சாலையில் இருந்த அலுவலக அறை, தொழிலாளர்கள் அறை, அமோனியா வாயு இருந்த அறை உள்ளிட்ட ஐந்து அறைகளுக்கு, மாவட்ட நிர்வாகம் 'சீல்' வைத்தது.
நேற்று மதியம், கலெக்டர் கவிதா உத்தரவின்படி, ஆர்.டி.ஓ., ரவிச்சந்திரன் நேற்று தொழிற்சாலையின் முன் கதவிற்கு 'சீல்' வைக்க காத்திருந்தனர்.
ஆனால், மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளின் அனுமதி கடிதம், இரவு 7:00 மணி வரை கிடைக்கவில்லை.
இதனால், தொழிற்சாலையின் மாற்றுப் பாதைக்கு 'சீல்' வைத்த அதிகாரிகள், தொழிற்சாலையின் முக்கிய பாதையில் 'சீல்' வைக்க முடியாமல் திரும்பினர்.
