/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சார் - பதிவாளர் அலுவலகம் தற்காலிகமாக இடமாற்றம்
/
சார் - பதிவாளர் அலுவலகம் தற்காலிகமாக இடமாற்றம்
ADDED : ஜூலை 21, 2025 11:52 PM
பொன்னேரி, பொன்னேரி சார் - பதிவாளர் அலுவலக கட்டடம் சேதமடைந்து இருப்பதால், தற்காலிகமாக வாடகை கட்டடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பொன்னேரி தாலுகா அலுவலக சாலையில், ஆங்கிலேயர் கால பழமையான கட்டடத்தில், 1865ம் ஆண்டு முதல் சார் - பதிவாளர் அலுவலகம் செயல்படுகிறது.
சார் - பதிவாளர் அலுவலகம் செயல்படும் கட்டடம் பழமையானதாக இருப்பதால், ஆவணங்களை பராமரிப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. மேலும், குறுகிய இடத்தில் செயல்படும் நிலையில், பொதுமக்களும், அலுவலர்களும் இடநெருக்கடியில் தவிக்கின்றனர்.
சார் - பதிவாளர் அலுவலகத்திற்கு புதிய கட்டடம் அமைக்க வேண்டும் என, தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது. தற்போது, தாலுகா அலுவலக சாலையிலேயே புதிய கட்டடம் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
புதிய கட்டடம் அமையும் வரை ஆவணங்களை பாதுகாக்கவும், இடநெருக்கடியை தவிர்க்கவும், சார் - பதிவாளர் அலுவலகம், வாடகை கட்டடத்திற்கு இடமாற்றம் செய்யப்படுவதாக, சார் - பதிவாளர் வீரகுமார் தெரிவித்துள்ளார்.
பொன்னேரி - தச்சூர் சாலையில் உள்ள கிருஷ்ணாபுரம், பெருமாள் நகர் பகுதியில், பிளாட் எண்: 10ல், நேற்று முதல் சார் - பதிவாளர் அலுவலகம் செயல்படுகிறது.
எனவே, புதிய கட்டடத்திற்கான கட்டுமான பணிகளை விரைவாக துவங்கி, பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.