
பொன்னேரி:பொன்னேரி, அன்னை அவென்யூ பகுதியைச் சேர்ந்தவர் குமார், 48. இவரது மகள் ஜோஷிதா, 24. எம்.டெக்., படித்து வந்த கல்லுாரி மாணவி.
நேற்று மாலை, வீட்டில் இருந்து பொன்னேரி பஜார் பகுதிக்கு சென்றுவிட்டு, தலைக்கவசம் அணியாமல், 'ஹோண்டா ஆக்டிவா' பைக்கில், பொன்னேரி - செங்குன்றம் சாலை வழியாக வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
அதே சாலையில் உள்ள மூகாம்பிகை நகர் அருகே சென்றபோது, பின்னால் வந்த லாரி ஒன்று, ஜோஷிதாவின் பைக் மீது மோதியது.
இதில், லாரியின் சக்கரத்தில் சிக்கி, ஜோஷிதா, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பொன்னேரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, ஜோஷிதாவின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
விபத்து குறித்து செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். விபத்து ஏற்படுத்திய, லாரி டிரைவரை பிடித்து விசாரிக்கின்றனர்.