/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவள்ளூரில் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் தயார் புதிய துணை மின் நிலையத்திற்கும் இடம் ஒதுக்கீடு
/
திருவள்ளூரில் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் தயார் புதிய துணை மின் நிலையத்திற்கும் இடம் ஒதுக்கீடு
திருவள்ளூரில் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் தயார் புதிய துணை மின் நிலையத்திற்கும் இடம் ஒதுக்கீடு
திருவள்ளூரில் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் தயார் புதிய துணை மின் நிலையத்திற்கும் இடம் ஒதுக்கீடு
ADDED : டிச 07, 2024 09:23 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்திற்கு புதிதாக மின்வாரிய செயற்பொறியாளர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான அலுவலகம் பெரியகுப்பத்தில் தயாராகி வருகிறது. மேலும், கலெக்டர் பெருந்திட்ட வளாகத்தில், 33 கே.வி., புதிய துணை மின் நிலையம் அமைக்க, 1.25 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பிறந்து, 25 ஆண்டுகளாகியும் இதுவரை மின்தேவையில் தன்னிறைவை அடையவில்லை. காஞ்சிபுரம் செயற்பொறியாளர் அலுவலகத்திற்கு உட்பட்ட, திருவள்ளூர் மாவட்டத்தில் பழுதடைந்த மின் கம்பங்கள், ஒயர், மின்மாற்றி மாற்றம் போன்ற எந்த குறை குறித்து புகார் தெரிவிக்கவும், காஞ்சிபுரத்தை நம்பியே உள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில், திருவள்ளூர், திருத்தணி ஆகிய இரண்டு கோட்ட பொறியாளர் அலுவலகங்கள் உள்ளன. இக்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வீடு, கடை, வணிக நிறுவனங்கள் என, 1 லட்சத்திற்கும் அதிகமான மின் இணைப்புகள் கொடுக்கப்பட்டு உள்ளன; 50,000க்கும் மேற்பட்ட விவசாய இணைப்புகள் வழங்கப்பட்டு உள்ளன.
இரண்டு கோட்டத்திற்கு உட்பட்டு, 19 மின் விநியோக மையங்களும், 60க்கும் மேற்பட்ட மின்மாற்றிகள் வாயிலாக மின்சாரம் விநியோகிக்கப்படுகின்றன.
புதிதாக, வீடு கட்டுவோர், தற்காலிக மற்றும் நிரந்தர மின் இணைப்பு கோரி, தங்கள் பகுதிகளில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்து, பணம் செலுத்தி வருகின்றனர்.
மேலும், இம்மாவட்டத்தில் மின்சாரம் வழங்க அமைக்கப்பட்ட மின்கம்பங்கள், ஒயர்கள் மற்றும் மின்மாற்றிகள் அமைத்து, 60 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. தவிர, புதிய மின் இணைப்பு வழங்க மின்கம்பங்கள், ஒயர்கள் தட்டுப்பாடும் நிலவுகிறது. மின்மாற்றி அமைக்கவும், பழுதான மின்மாற்றிகளை அப்புறப்படுத்தி, புதிதாக நிர்ணயம் செய்யவும், போதுமான இருப்பு இல்லை.
இந்த நிலையில், பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை தொடர்ந்து, சில மாதங்களுக்கு முன், திருவள்ளூர் மாவட்ட மின்வாரிய செயற்பொறியாளராக சேகர் நியமிக்கப்பட்டு உள்ளார். பெரியகுப்பம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் சிறிது நாட்கள் பணிபுரிந்த நிலையில், இடப்பற்றாக்குறை காரணமாக, காஞ்சிபுரத்தில் தான் பணிபுரிந்து வருகிறார்.
இதையடுத்து, செயற்பொறியாளர் அலுவலகத்திற்கு பெரியகுப்பம் மேம்பாலம் அருகில் உள்ள, தனியார் கட்டடம் வாடகைக்கு பெறப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, திருவள்ளூர் மாவட்ட மின்வாரிய அலுவலர் ஒருவர் கூறியதாவது:
பெரியகுப்பம் மேம்பாலம் அருகில் புதிய செயற்பொறியாளர் அலுவலகம் அமைக்கும் பணி, மூன்று மாதமாக நடைபெற்று வருகிறது. இப்பணி முழுதும் பணி நிறைவடைந்ததும், செயற்பொறியாளர் அலுவலகம் செயல்பட துவங்கும்.
மேலும், திருவள்ளூர் நகரில் தடையின்றி மின்சாரம் வழங்க, மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில், 1.25 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. அங்கு, 33 கே.வி., துணை மின் நிலையம் அமைக்கப்பட உள்ளது. இதனால், திருவள்ளூர் நகரம் மட்டுமன்றி, திருப்பாச்சூர், கைவண்டூர், பாண்டூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளும் பயன்பெறும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
செயற்பொறியாளர் அலுவலகத்தால்
கிடைக்கும் பயன்கள்
* ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு மின்தேவைக்கு ஒதுக்கப்படும் நிதி தற்போது, திருவள்ளூர் மாவட்டத்திற்கு தனியாக கிடைக்கும்.
* மத்திய, மாநில அரசுகள் ஆண்டுதோறும் வழங்கும், மின்கம்பங்கள், மின்மாற்றிகள், ஒயர்கள், மற்றும் சலுகைகள் திருவள்ளூர் மக்கள் மட்டுமே பயன்பெறுவர்.
* உடனுக்குடன் பராமரிப்பு பணியினை செய்து, அதற்கான பில் தொகை தாமதமின்றி வழங்க முடியும்.
* தனி இருப்பு அறை அமையும்; அங்கு, மின்குறை தீர்ப்பதற்கான அனைத்து பொருட்களும், அவற்றை நிறைவேற்ற அலுவலர்கள் தயார் நிலையில் இருப்பர்.