/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவள்ளூர்: புகார் பெட்டி; மழைநீர் குட்டையானது கோட்டக்கரை சாலை
/
திருவள்ளூர்: புகார் பெட்டி; மழைநீர் குட்டையானது கோட்டக்கரை சாலை
திருவள்ளூர்: புகார் பெட்டி; மழைநீர் குட்டையானது கோட்டக்கரை சாலை
திருவள்ளூர்: புகார் பெட்டி; மழைநீர் குட்டையானது கோட்டக்கரை சாலை
ADDED : நவ 14, 2024 01:56 AM

மழைநீர் குட்டையானது கோட்டக்கரை சாலை
கும்மிடிப்பூண்டி ஜி.என்.டி., சாலையில் இருந்து கோட்டக்கரை வழியாக பேரூராட்சி அலுவலகம் வரையிலான சாலை, கும்மிடிப்பூண்டி ஒன்றிய நிர்வாக பராமரிப்பில் உள்ளது.
இச்சாலையில் அரசு துறை சார்ந்த அலுவலகங்கள் உள்ளன. மேலும், நுாற்றுக்கணக்கான நோயாளிகள் வந்து செல்லும் கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனையும் அமைந்துள்ளது.
ஆனால், இச்சாலை பல மாதங்களாக குண்டும் குழியுமாக உள்ளது. தற்போது, சாலை பள்ளங்களில் மழைநீர் தேங்கி குட்டைகள் போல் காட்சியளிக்கின்றன.
மோசமான நிலையில் உள்ள சாலையை உடனடியாக சீரமைக்க, கும்மிடிப்பூண்டி ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- அ.முகமது சபீக், கும்மிடிப்பூண்டி.
பேருந்து நிலையத்தில் குடிநீர் வசதி அமையுமா?
திருத்தணி நகராட்சி அலுவலகம் பின்புறத்தில், அண்ணா பேருந்து நிலையம் இயங்கி வருகிறது. இந்த பேருந்து நிலையத்தில், 24 மணி நேரமும் நுாற்றுக்கணக்கான பயணிகள் பேருந்துகளுக்காக காத்திருப்பர்.
இந்நிலையில், பேருந்து நிலையத்தில் பயணியருக்கு குடிநீர் வசதி ஏற்படுத்தி தராமல், நகராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டி வருகிறது. இதனால், பயணியர் பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளில் பணம் கொடுத்து குடிநீர் வாங்கி செல்ல வேண்டிய நிலை உள்ளது.
இது தொடர்பாக, பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும், தற்போது வரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக குடிநீர் வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- க.விநாயகம், திருத்தணி.
ரேஷன் கடையில் குரங்கு தொல்லை
திருவாலங்காடு ஒன்றியம் வியாசபுரம் கிராமத்தில், வி.ஏ.ஓ., அலுவலகம் அருகே ரேஷன் கடை அமைந்துள்ளது.
இந்த ரேஷன் கடை அருகே, 10க்கும் மேற்பட்ட குரங்குகள் முகாமிட்டுள்ளன. அவை, ரேஷன் பொருட்கள் வாங்க வருவோரிடம் இருந்து அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை பறித்து விடுகின்றன. தடுக்க முற்பட்டால் கடிக்க பாய்வதாகவும் தெரிவிக்கின்றனர்.
எனவே, குரங்குகளை பிடிக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- - கே.ராமச்சந்திரன், வியாசபுரம்.

