/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மழையால் திருவள்ளூர் வடக்கு ராஜ வீதி சாலை சேதம்
/
மழையால் திருவள்ளூர் வடக்கு ராஜ வீதி சாலை சேதம்
ADDED : அக் 19, 2024 12:48 AM

திருவள்ளூர்:திருவள்ளூர் வடக்குராஜ வீதி சாலை, மழையால் குண்டும் குழியுமாக மாறியதால், வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகின்றனர்.
திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்டது வடக்குராஜ வீதி சாலை. செங்குன்றம் சாலை-பஜார் வீதியை இணைக்கும் வகையில் உள்ள பிரதான சாலையாக இச்சாலை திகழ்கிறது. பஜார் வீதியில் உள்ள, அரிசி, மளிகை மொத்த வியாபார கடைகள், காய்கறி மார்க்கெட் உள்ளிட்டவைகளுக்கு தினமும் பொருட்கள் எடுத்து வரும் லாரிகள் இச்சாலையைத் தான் பயன்படுத்தி வருகின்றன.
தினமும் மக்கள் கூட்டத்தாலும், வாகன போக்குவரத்தாலும் இச்சாலையில் கடும் நெரிசல் நிலவி வருகிறது. இந்த நிலையில், சமீபத்தில் பெய்த தொடர் மழையால், இச்சாலை குண்டும், குழியுமாகி மாறிவிட்டது.
இதனால், ஆட்டோ உள்ளிட்ட சிறிய ரக போக்குவரத்து வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் சிரமப்பட்டு சென்று வருகின்றன. மேலும், இருசக்கர வாகன ஓட்டிகளும் இச்சாலை பள்ளத்தால், செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
எனவே, நகராட்சி நிர்வாகம் சேதமடைந்த வடக்குராஜ வீதி சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என, பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இணைப்பு சாலைகள் சேதம்
கும்மிடிப்பூண்டி பகுதியில் பெய்த கனமழையால், சென்னை -- கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், மேம்பாலங்களுக்கு கீழ் உள்ள இணைப்பு சாலைகளில் குளம் போல் மழை வெள்ளம் சூழ்ந்தது.
கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகம், சிப்காட், கன்னியம்மன் கோவில், பெத்திக்குப்பம், எளாவூர், கவரைப்பேட்டை, தச்சூர் ஆகிய பகுதிகளில் உள்ள இணைப்பு சாலைகள் மழைக்கு குளமானது.
தொடர்ந்து அப்பகுதியில் சாலைகள் சேதமடைந்து வாகன போக்குவரத்துக்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மழை வெள்ளம் தேங்கிய இடங்களில் சாலை பழுதாகி பெரிய அளவிலான பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன.
பள்ளம் இருப்பது தெரியாமல் கடக்கும் வாகன ஓட்டிகள் அதில் சிக்க நேரிடுகிறது. அப்போது, கார், ஆட்டோ போன்ற வாகனங்களின் அடிப்பகுதி சேதமடையும் நிலை ஏற்பட்டுள்ளது. இருசக்கர வாகன ஓட்டிகள் அச்சத்துடன் அப்பகுதிகளை கடந்து சென்று வருகின்றனர்.
தேசிய நெடுஞ்சாலை ஆணையம் துரித நடவடிக்கை எடுத்து உடனடியாக சேதமான இணைப்பு சாலைகளை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.