/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மக்களை தேடி ஆய்வக சேவை திட்டம் திருவாலங்காடு பகுதியினர் வலியுறுத்தல்
/
மக்களை தேடி ஆய்வக சேவை திட்டம் திருவாலங்காடு பகுதியினர் வலியுறுத்தல்
மக்களை தேடி ஆய்வக சேவை திட்டம் திருவாலங்காடு பகுதியினர் வலியுறுத்தல்
மக்களை தேடி ஆய்வக சேவை திட்டம் திருவாலங்காடு பகுதியினர் வலியுறுத்தல்
ADDED : மார் 01, 2024 07:43 PM
திருவாலங்காடு:திருவாலங்காடு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில், 'மக்களை தேடி ஆய்வக சேவை' திட்டம் அமைக்க வேண்டும் என, அப்பகுதியினர் எதிர்பார்க்கின்றனர். இதனால் சுற்றுவட்டாரத்தில் உள்ள, 70,000 ஏழை மக்கள் மருத்துவ சேவை பெற வாய்ப்புள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில், 40 லட்சத்துக்கு அதிகமான மக்கள் வசிக்கின்றனர்.
இதில் திருவாலங்காடு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் தினமும் 200க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் வந்து செல்கின்றனர். மேலும் இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை சுற்றி 60க்கும் மேற்பட்ட கிராமங்களும் 70,000த்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் தின கூலித்தொழிலாளிகள், விவசாயிகள் இவர்கள் சிகிச்சைக்காக இங்கு வரும் நிலையில் ஸ்கேன், எக்ஸ்-ரே, ரத்த மாதிரி சோதனை என சிறிய சோதனைகளுக்கு கூட, 15-- - 20 கி.மீ., துாரமுள்ள திருவள்ளூர் அல்லது அரக்கோணத்திற்கு செல்லும் அவலம் உள்ளது.
இங்கிருந்து மாவட்ட தலைநகரமான திருவள்ளூருக்கு செல்ல போதிய போக்குவரத்து வசதி இல்லாததால் நோயாளிகள், 200 - -300 ரூபாய் கொடுத்து ஆட்டோவில் செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது.
மேலும் சாதாரண மருத்துவ சேவைகளுக்கு கூட பயண செலவு, மருத்துவ செலவு என குறைந்தது 1,000 ரூபாய் செலவிட வேண்டிய நிலை உள்ளது. இதனால் அவர்கள் பண விரயம் ஏற்படுவதுடன் வீண் அலைச்சலுக்கு உள்ளாகி வருகின்றனர்.
திருவாலங்காடுக்கு, 'மக்களை தேடி ஆய்வக சேவை' வேண்டும் என்ற கோரிக்கையை உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். விரைவில் அதற்கான வாய்ப்பு கிடைக்கும்.
சுகாதார துறை அதிகாரி, திருவள்ளூர்.
அலைச்சலுக்கு தீர்வு வேண்டும்
தமிழகத்தில் முதன் முறையாக நாகர்கோவில் மாநகராட்சியில், 'மக்களைத்தேடி ஆய்வக சேவை' என்ற திட்டத்தை கடந்த மாதம்மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் துவங்கி வைத்தார். தற்போது ஆரம்ப சுகாதார நிலையத்தில், 29 வகையான ஆய்வக வசதிகள் இருக்கின்றன.
இந்த ஆய்வுகளை மேற்கொள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வரும் பொதுமக்கள் மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகளுக்கோ, அல்லது மாவட்ட மருத்துவமனைக்கோ செல்ல வேண்டிய சூழல் இருக்கிறது. இத்திட்டம் வாயிலாக ஆரம்ப சுகாதார நிலையங்களிலே, 63 வகையான மாதிரிகளுக்கு ஆய்வு பரிசோதனைகளை செய்து அதற்கான முடிவுகளை பெற முடியும். எனவே மக்களை அலைச்சலில் இருந்து போக்கும் இந்த திட்டத்தை திருவாலங்காடில் செயல்படுத்த வேண்டும்.
- மா. பெருமாள், திருவாலங்காடு.

