/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவள்ளூர் புதிய பேருந்து நிலைய பணி முடிக்க... கெடு : 40 நாட்களில் பயன்பாட்டிற்கு கொண்டு வர உத்தரவு
/
திருவள்ளூர் புதிய பேருந்து நிலைய பணி முடிக்க... கெடு : 40 நாட்களில் பயன்பாட்டிற்கு கொண்டு வர உத்தரவு
திருவள்ளூர் புதிய பேருந்து நிலைய பணி முடிக்க... கெடு : 40 நாட்களில் பயன்பாட்டிற்கு கொண்டு வர உத்தரவு
திருவள்ளூர் புதிய பேருந்து நிலைய பணி முடிக்க... கெடு : 40 நாட்களில் பயன்பாட்டிற்கு கொண்டு வர உத்தரவு
ADDED : மார் 13, 2025 11:00 PM

திருவள்ளூர்:திருவள்ளூரில் 33 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வரும், ஒருங்கிணைந்த பேருந்து நிலைய பணி, 80 சதவீதம் நிறைவடைந்து உள்ளது. மீதம் உள்ள பணியை 40 நாட்களுக்குள் நிறைவேற்றி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
திருவள்ளூர் ராஜாஜி சாலையில், தற்போது செயல்பட்டு வரும் திரு.வி.க., பேருந்து நிலையம், கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது.
அப்போதைய போக்குவரத்து வசதிக்கு ஏற்ப பேருந்து நிலையம் கட்டப்பட்டது. தற்போது, திருவள்ளூர் மாவட்ட தலைநகராக இருப்பதாலும், ஏராளமான குடியிருப்புகள் உருவாகி இருப்பதாலும், இந்நகரம் அசுர வளர்ச்சி அடைந்துள்ளது.
மேலும், பள்ளிகள், தொழிற்சாலைகள் என வளர்ச்சி அடைந்துள்ளதால், நகரில் போக்குவரத்து அதிகரித்து விட்டது. அரை ஏக்கருக்கும் குறைவான இடத்தில், செயல்பட்டு வரும் திரு.வி.க., பேருந்து நிலையத்தில் இருந்து, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, பெரியபாளையம், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி மற்றும் ஆந்திர மாநிலம் திருப்பதி, காளஹஸ்தி, கர்நாடக மாநிலம் பெங்களூரு போன்ற பல்வேறு பகுதிகளுக்கும், பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
போக்குவரத்து நெரிசல்
தினமும், நுாற்றுக்கணக்கான, பேருந்துகள் இயக்கப்படும் இப்பேருந்து நிலையத்தில், ஒரே நேரத்தில், 10 பேருந்துகள் மட்டுமே நிறுத்த முடியும்.
பேருந்து நிலையத்தின் நுழைவு மற்றும் வெளியேறும் வழி, குறுகலாக இருப்பதால், பேருந்துகள் உள்ளே சென்று, வெளியில் வர சிரமப்படுகின்றன.
சாலையில், ஆட்டோ, இருசக்கர வாகனங்கள் குறுக்கிடுவதால், தினமும் நெரிசல் ஏற்படுகிறது. இச்சாலையில், நகராட்சி மேல்நிலை பள்ளி, வணிக நிறுவனங்கள் உள்ளதால் பொதுமக்கள் தினமும் அவதிப்பட்டு வருகின்றனர்.
வேடங்கிநல்லுார் தேர்வு
இதையடுத்து, வசதியான இடத்தில் பேருந்து நிலையம் கட்ட வேண்டும் என, திருவள்ளூர் நகர பொதுமக்களின் வேண்டுகோளை ஏற்று, கடந்த, 2019ம் ஆண்டு, திருவள்ளூர்-ஊத்துக்கோட்டை சாலை, ஐ.சி.எம்.ஆர்., அருகில் உள்ள வேடங்கிநல்லுாரில், 5 ஏக்கர் பரப்பளவு நிலம், புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்காக, வருவாய் துறை, ஒதுக்கியது.
கடந்த 2023ம் ஆண்டு தமிழக அரசு புதிய பேருந்து நிலையம் அமைக்க நிர்வாக அனுமதி வழங்கி, 33 கோடி ரூபாய் நிதி ஒதுக்கிடு செய்தது.
இதையடுத்து, வேடங்கிநல்லுாரில் கடந்த, 2023ம் ஆண்டு புதிய பேருந்து நிலையம் கட்டும் பணி துவங்கியது.
50 பேருந்து நிறுத்தலாம்
திருவள்ளூரில் உள்ள, திரு.வி.க., பேருந்து நிலையம், 'சி' கிரேடு வகையைச் சார்ந்தது. இங்கு, ஒரே நேரத்தில் 10 பேருந்துகளே நிறுத்த முடியும். இதை தரம் உயர்த்தி, 'ஏ' கிரேடு பேருந்து நிலையமாக உயர்த்தும் வகையில், வேடங்கிநல்லுார் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.
இங்கு, புதிய நிலையம் கட்டப்பட்டால், அனைத்து நவீன வசதிகளுடன், ஒரே சமயத்தில், 50 பேருந்துகள் நிற்கும் அளவிற்கு விசாலமாக அமையும். மேலும், வெளிமாவட்டங்களுக்கும் நேரடியாக பேருந்துகளும் இயக்கப்படும் வாய்ப்பு உள்ளது.
இந்நிலையில், பேருந்து நிலைய கட்டுமான பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதை, கலெக்டர் பிரதாப் நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார்.
அப்போது, பேருந்து நிலைய கட்டுமான பணிகள், 80 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அங்கு, 5,889 ச.மீட்டர் பரப்பளவில் அமைய உள்ளது. தரைத்தளம் மற்றும் மாடி என, 2,493 ச.மீட்டர் பரப்பில் பிரதான கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. ஒரே நேரத்தில், வெளியூர் பேருந்து -45, நகர பேருந்து- 11 என, 56 பேருந்துகள் நிறுத்தும் வசதி உள்ளது.
மேலும், 107 கடைகள் கட்டப்பட்டு வருகின்றன. பயணியர் வசதிக்காக, 550 இருசக்கர வாகனம், 16 கார்கள் நிறுத்தும் வசதி ஏற்படுத்தப்படும்.
இப்பணிகளை 40 நாட்களுக்குள் நிறைவு செய்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் வகையில் பணியை துரிதப்படுத்த, கலெக்டர் உத்தரவிட்டார். உடன்,திருவள்ளூர் நகராட்சி கமிஷனர்-பொறுப்பு, தட்சிணாமூர்த்தி, பொறியாளர் ஜெயக்குமார், உதவி பொறியாளர் சரவணன், சுகாதார ஆய்வாளர் கோவிந்தராஜ் உள்ளிட்டோர் இருந்தனர்.